காஷ்மீர்: புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜம்மு – காஷ்மீர் மாநிலம் எப்படி உள்ளது?

இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில், இந்தியக் காவல் படையினர் மீது வியாழனன்று நடந்த தாக்குதலில் 40க்கும் மேலான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டபின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மத ரீதியான பதற்றம் நிலவுகிறது.

ஜம்மு பகுதியில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையிலான செயல்களும், அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து வருகின்றன.

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் அமலில் இருக்கிறது. எனினும், சனிக்கிழமையன்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில், ‘பேந்தர்ஸ் கட்சி’ எனப்படும் ஜம்மு – காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் பங்கேற்றனர்.

இலங்கை
இலங்கை

பெரும்பாலும் இந்துக்கள் வாழும் ஜம்மு பிராந்தியத்தில் காஷ்மீரி இன மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே, ஜம்மு மட்டுமல்லாது, ஹரியாணா சத்தீஸ்கர், உத்தராகண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் காஷ்மீரி மாணவர்கள், அவர்கள் தங்கியுள்ள இடங்களில் இருந்து வெளியேற வற்புறுத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பிராந்தியத்திலும் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.

“ஜம்முவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு காஷ்மீர் பிராந்தியம்தான் சந்தையாக உள்ளது. இன்னும் இரு தினங்களில் காஷ்மீரிகளுக்கு எதிரான செயல்கள் நிறுத்தப்படாவிட்டால், ஜம்மு பொருட்களை நாங்கள் புறக்கணிப்போம்,” என்று ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் எனும் முக்கிய வணிகப் பகுதியின் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் பஷீர் அகமது கூறியுள்ளார்.

Kashmir

“ஜம்மு – காஷ்மீர் மக்களை இன்னலுக்கு உள்ளாக்குவதற்கான வாய்ப்பாக இந்தத் தீவிரவாதத் தாக்குதல் இருக்கக்கூடாது. இந்த நேரத்தில் மத உணர்வுகளைத் தூண்டி நம்மைப் பிரிக்க முயற்சிகள் நடக்கும். இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களையும், ஜம்மு மக்களுக்கு எதிராக காஷ்மீர் மக்களையும் தூண்ட முயற்சிக்கப்படும். அத்தகைய பிரிவினை சூழ்ச்சிகளுக்கு நமது வலி தூண்டுதலாக இருக்கக்கூடாது,” என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.

மற்றுமொரு முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லாவும் காஷ்மீரி மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்

2008ஆம் ஆண்டு அமர்நாத் கோயிலுக்குச் சொந்தமான நிலம் பெரும்பாலும் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டபோது அப்போதும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மத ரீதியிலான பதற்றங்கள் உருவாகின.

இதனிடையே, சனியன்று ஜம்மு – காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில், ரோந்துப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஐ.இ.டி குண்டு ஒன்றைச் செயலிழக்கச் செய்யும் முயற்சியின்போது குண்டு வெடித்ததால் மேஜர் சித்ரேஷ் சிங் பிஷ்ட் எனும் ராணுவ அதிகாரி உயிரிழந்தார். -BBC_Tamil

TAGS: