சென்னை: கடந்த 6 நாட்களாக காணாமல் போய் இருக்கும் சமூக போராளி முகிலனுக்காக இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று யாரும் இதுவரை அழுத்தமாக குரல் கொடுக்கவில்லை.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன் கடந்த வாரம் சென்னையில் காணாமல் போனார். இன்னும் இவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
இவருக்கு என்ன ஆனது, இவரை கண்டுபிடிப்பதில் ஏன் இன்னும் தாமதம் நிலவி வருகிறது என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
முகிலன் கடந்த 15ம் தேதி சென்னையில் ‘கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற பெயரில் அவர் முக்கிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அன்று இரவுதான் அவர் காணாமல் போனார். இவரை போலீசார் கைது செய்து இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூட தகவல்கள் வருகிறது. ஆனால் இவரை குறித்து வரும் செய்திகள் எல்லாம் உறுதிபடுத்தப்படாத ஒன்றாகவே உள்ளது.
வழக்கு
இவர் காணாமல் போனது குறித்து சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் முகிலனை நாளை சென்னை ஹைகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் நாளைய விசாரணை அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
யாருமில்லை
ஆனால் முகிலன் காணாமல் போய் ஒருவாரம் ஆகியும் கூட இவருக்கு இதுவரை பெரிய அரசியல் தலைவர்கள் யாரும் பேசவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தரப்பு, காங்கிரஸ் தலைவர்கள், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் என்று யாரும் இதுவரை முகிலன் குறித்த கேள்வி எழுப்பவில்லை. அவரை கண்டுபிடிக்கவும் கோரிக்கை வைக்கவில்லை.
அதிமுக ஏன்?
அதேபோல் பொறுப்பான அரசாக அதிமுகவும் இவரின் நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று தமிழக அரசு சார்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவரை கைது செய்து இருக்கிறார்களா என்று தமிழக போலீசும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால் அவரின் மாயத்தில் தொடர்ந்து மரணம் நீடித்து வருகிறது.
வைகோ மட்டும்
இதுவரை முகிலன் தொடர்பாக பேசி இருக்கும் ஒரே அரசியல் தலைவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பாக சில டிவிட்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் இதில் பெரிய அளவில் அமைதி காத்து வருகிறது.