புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தாக்குதலை தவிர்க்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், விரிவான பதிலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் 10 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
10 மாநிலங்களின் டிஜிபி மற்றும் தலைமை செயலாளர்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் டெல்லி அரசு ஆகியோர் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிகார், ஜம்மு காஷ்மீர், ஹரியாணா, மேகாலயா, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவையே அந்த 10 மாநிலங்கள் ஆகும்.
வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால், இது குறித்து ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படவில்லையென பிரகாஷ் ஜாவ்டேக்கர் கூறியது உண்மையா? BBCFactCheck
கடந்த வாரத்தில் இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற தீவிரவாத தற்கொலை தாக்குதலுக்கு பின்னர், காஷ்மீர் மாணவர்கள் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சமீபத்தில் மகாராஷ்டிராவில் காஷ்மீரை சேர்ந்த நான்கு மாணவர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதே போன்று பல்வேறு மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள் தாக்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. -BBC_Tamil