காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தானில் 1 கிலோ தக்காளி ரூ.250 ஆக உயர்ந்தது: ஏற்றுமதியை நிறுத்திய டெல்லி, மத்திய பிரதேச மாநில விவசாயிகள்

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை மத்திய பிரதேசம், டெல்லியைச் சேர்ந்த விவசாயிகள் முழுவதுமாக நிறுத்தியுள்ளனர். இதனால், அந்நாட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.250-ஆக உயர்ந்தது.

ஜம்மு-காஷ்மிரின் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-ஏ-முகமது இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வந்த மத்திய பிரதேசம்மற்றும் டெல்லி மாநில விவசாயிகள் அதனைமுழுவதுமாக நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக, பாகிஸ்தானில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அங்கு தக்காளியின்விலை கிலோவுக்கு ரூ.250-ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் டெல்லியின் ஆசாத்பூர் மண்டி தக்காளி வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த அசோக் கவுசிக் கூறியதாவது:

இங்கிருந்து பாகிஸ்தானுக்கு 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள்அனுப்பப்பட்டு வந்தன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் சேர்த்து நாளொன்றுக்கு சுமார் 3,000 டன் தக்காளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது, இந்த ஏற்றுமதி முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதேபோல், மத்திய பிரதேசத்தில் இருந்தும் பாகிஸ்தானுக்கான தக்காளி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகும் தகவலின்படி, மற்ற நாடுகளிடம் பெறுவதைவிட இந்தியாவிடமிருந்துமிகக் குறைந்த விலைக்கு அந்நாட்டுக்கு தக்காளி கிடைத்து வந்துள்ளது.

ரூ.20 முதல் 30 வரையிலான விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த தக்காளி பாகிஸ்தானில் ஒரு கிலோ ரூ.70 முதல் 80 விலைக்கு விற்கப்பட்டது. தற்போது, இந்திய விவசாயிகளின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் அதன் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ஜாபூவா மற்றும் மாண்டஸர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பாகிஸ்தானுக்கு தக்காளி மற்றும் இதர காய்கறிகளை ஏற்றுமதி செய்ய மறுத்துவிட்டனர். இதனால், பாகிஸ்தானில் பச்சை மிளகாய் ரூ.160, சிவப்பு மிளகாய் ரூ.300, இஞ்சி ரூ.150, உருளைக் கிழங்கு ரூ.70, வெங்காயம் ரூ.90, கத்தரிக்காய், வெண்டைக்காய் மற்றும் சிம்லா மிளகாய் ஆகியவை தலா ரூ.110 என்ற விலைவாசியில் விற்பனையாகி வருகிறது.

தக்காளி, வெங்காய அரசியல்

கடந்த காலங்களில் தேர்தல்களுக்கு முன் மிக அதிகமாக உயர்ந்த வெங்காய விலை டெல்லியில் இரண்டு முறை அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பி இருந்தது. இதற்கு வட மாநிலங்களில் ‘சாலட்’ உள்ளிட்ட அனைத்து உணவுகளிலும் தக்காளி, வெங்காயம் அதிக அளவில் பயன்படுத்துவது காரணம்.

இம்ரானுக்கு நெருக்கடி

இந்தியாவை விட அதிகமாக அசைவ உணவும் அதிகம் உண்ணும் பாகிஸ்தானியர்களின் உணவில் வெங்காயமும், தக்காளியும் முக்கிய அங்கமாகும். இதனால், காய்கறிக்காக அந்நாட்டின் இம்ரான் கான் அரசு தன் தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்.

ஏற்றுமதி ரூ.3,482.99 கோடி

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு விவசாயப்பொருட்கள், இறைச்சி, மருந்துகள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதன் கடந்த ஆண்டின் மதிப்பு ரூ.3,482.94 கோடி ஆகும்.

-eelamnews.co.uk

TAGS: