புதுடில்லி: பயங்கரவாதிகள் மீது இன்று (பிப்.26) பாக்., எல்லைக்கோடு அருகே மட்டுமல்லாது, பல ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக அந்நாட்டிற்கு பல கி.மீ., துாரம் ஊடுருவி, அங்கிருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீதும் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட பாகிஸ்தானையே இந்தியா தாக்கி உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலில் வந்த தகவல்
முதலில் வந்த தகவல்களின்படி, பாக்., எல்லையோரம் உள்ள சகோடி, முசாபராபாத் பகுதிகளில் இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.ஆனால் அடுத்தடுத்து வரும் தகவல்களின்படி, பாக்.,கின் உள்ளே பல கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள பாலகோட் என்ற பகுதியையும் நமது விமானப்படை தாக்கி உள்ளது. இதன் மூலம், பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மட்டுமல்லாது, பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள பகுதிகளையும் இந்தியா தாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
எங்கு இருக்கிறது பாலகோட்?
புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கப்படும் என ஏற்கனவே பிரதமர் மோடி சூளுரைத்திருந்தார். ஆனால், பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என மோடி அப்போது குறிப்பிடவில்லை. அப்படி அவர் முன்பே சொல்லி இருந்தால், அது முழுமையான போருக்கு வழி வகுத்துவிடும்.
சர்ஜிகல் ஸ்டிரைக்கில் இருந்து வித்தியாசம்
உரி தாக்குதலுக்கு பழி வாங்குவதற்காக ஏற்கனவே செப்.29, 2016ல் எல்லைக் கோட்டு பகுதியில் செயல்பட்ட 7 பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய படைகள் அழித்தன.இன்று நடந்தது சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை விட பெரிய தாக்குதல். சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால், இன்றைய தாக்குதலில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது பெரிய, பெரிய குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இந்தியாவின் துணிச்சல்
இந்தியா தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்த்து ஏற்கனவே பாகிஸ்தான் முழு கண்காணிப்புடன் இருந்தது. அதையும் மீறி இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது.இதன் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா முக்கியமான ஒரு செய்தியை சொல்லி உள்ளது. ‛‛நீ என்னதான் கண்காணிப்புடன் இருந்தாலும், உனது நாட்டுக்குள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்தும் திறமையும் தைரியமும் எங்களுக்கு இருக்கிறது” என்பதே அந்த செய்தி.
தாக்குதல் நடந்தபோது, ஏதாவது ஒரு இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி இருந்தால் கூட அது மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும்.
‛புல்வாமா தாக்குதலுக்காக இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பதிலடி தரும்” என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறி இருந்தார். அந்த எச்சரிக்கையை துாக்கி துாரப்போட்டுவிட்டு, பாகிஸ்தானை பதம் பார்த்துள்ளது இந்தியா.
-dinamalar.com