இந்திய – பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பற்றி 5 தகவல்கள்

பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து இன்று அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார். இதன்பின் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு குறித்த தகவலகள் அதிகமாக இணையத்தில் தேடப்பட்டன.

இது குறித்த 5 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

எல்லை கட்டுப்பாட்டு கோடு என்றால் என்ன?

இந்தியா – பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற உடனே ஜம்மு காஷ்மீரை மையமாக வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டுக் கொண்டன. இந்தப் பிரச்சனையை விசாரிக்கவும், மத்தியஸ்தம் செய்யவும் இந்தியா-பாகிஸ்தானுக்கான ஐ.நா. கமிஷனை உருவாக்குவதற்கான தீர்மானம் எண் 38 (1948)-ஐ ஐ.நா. 1948-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. ராணுவப் பார்வையாளர்கள் மேற்பார்வையில்,  போர் நிறுத்த எல்லைக்கோட்டை உருவாக்கிக்கொள்வதற்கான கராச்சி ஒப்பந்தத்தில் 1949-ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன.

மீண்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் 1971ஆம் ஆண்டு இன்னொரு முறை போரிட்டன. அதன் பின்னால் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய பாகிஸ்தான் தரப்புகள் பேச்சு நடத்தி, 1949-ம் ஆண்டின் போர் நிறுத்த எல்லைக் கோட்டில் சில பரஸ்பர மாறுதல்களை செய்து அதனை கட்டுப்பாட்டுக் கோடாக (LoC) ஏற்றுக்கொண்டன.

எல்லை கட்டுப்பாட்டு கோடு என்றால் என்ன?எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பகுதி

கட்டுப்பாட்டு எல்லை கோட்டின் நீளம் என்ன?

ஜம்மு காஷ்மீரில்  இந்த கட்டுப்பாட்டு எல்லைக் கோடு  740 கி.மீ நீளம் செல்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் எல்லைக் கோட்டின் இரு பக்கங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.  இந்த கோடானது பனி படந்த மலைகள் ஊடாகவே செல்கிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு

எங்கு உள்ளது இந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு?

1972-ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் ஒப்பந்தத்தின்படி இரு நாட்டின் சார்பில் நியமிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்த கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் தென்முனையாக ‘சங்கம்’ என்ற இடத்தை தீர்மானித்தனர். ‘பாயின்ட் NJ9842’ என்ற இடத்தை அவர்கள் இந்தக் கோட்டின் வடக்கு எல்லையாகவும் அடையாளம் காட்டினர். ஜம்மு பகுதியில் இந்தக் கோடு பூஞ்ச், ரஜௌரி ஆகிய இடங்களின் வழியாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இது குப்வாரா, உரி வழியாகவும் செல்கின்றன.

இந்திய - பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பற்றி 5 தகவல்கள்

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் வேலிகள் போடப்பட்டுள்ளனவா?

எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் இரு பக்கமும் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான முறை துப்பாக்கி சூடு நடக்கிறது. ஆயிரக் கணக்கான படையினர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் இரு பக்கத்திலும் நிறுத்தப்பட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு இந்தியா எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் வேலிகள் போடும் பணியினை தொடங்கியது. ஆனால், 2003ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதும் 2013ஆம் ஆண்டுவரை இரு தரப்பிடையே சண்டைகள் குறைந்தன. ஆனால், 2013க்கு பின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சண்டைகள் அதிகரித்தன. 2004ஆம் ஆண்டு, இந்திய ராணுவ பொறியாளர்கள் பெரும் பகுதியில் வேலிகளை அமைத்தனர்.

எல்லை கட்டுப்பாட்டு கோடு என்பது சர்வதேச எல்லையா?

இந்த 740 கிமீ நீள எல்லை கட்டுப்பாட்டு கோடு அதிகாரப்பூர்வ சர்வதேச எல்லை பகுதி அல்ல. இந்தியப் படைகள் கட்டுப்பாட்டு கோட்டின் இந்திய நிர்வாக பகுதியில் இருக்கும். பாகிஸ்தான் துருப்புகள் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் பக்கம் நிற்கும். -BBC_Tamil

TAGS: