முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்.. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி.. அவசர ஆலோசனையில் மோடி அதிரடி உத்தரவு

டெல்லி: எந்தவித அழுத்தத்திற்கும் பணிந்து போகாமல், தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர்.

இதில் பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய பைலட்டை மீட்பது தொடர்பாகவும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சுமார் 90 நிமிடங்களுக்கு இந்த ஆலோசனை விரிவாக அமைந்திருந்தது.

இது தொடர்பாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுகையில், “இந்திய தரைப்படை, கடற்படை, மற்றும் வான்படை ஆகிய முப்படைகளுக்கும், முழு சுதந்திரம் அளிப்பதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

tamil.oneindia.com

TAGS: