பெப்ரவரி 14 ஆம் திகதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு இந்திய சீ ஆர் பி எஃப் வீரர்கள் பயணித்த வாகனப் பேரணி மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி 40 இற்கும் அதிகமான வீரர்களைப் பலி கொண்டது.
இதற்கு இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் புல்வாமா தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஸ் இ முகமது அமைப்பை இயக்கியது பாகிஸ்தானின் உளவுத்துறை தான் என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் பாகிஸ்தான் முன்னால் அதிபர் முஷராஃப்.
ஏற்கனவே இத்தாக்குதலை ஜெய்ஸ் இ முகமது இயக்கம் நடத்தவில்லை என்றும் தங்கள் மண்ணில் இருந்து இந்த அமைப்பு செயற்படவில்லை என்றும் பாகிஸ்தான் இராணுவம் சமாளித்து வரும் நிலையில் முஷராஃப் இந்த அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்தியா நடத்திய பதில் தாக்குதல்களைத் தான் வரவேற்பதாகவும் அந்த இயக்கம் ஏற்கனவே தன்னை இரு முறை கொல்லப் பார்த்தது என்றும் முஷராஃப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முஷராஃப் அதிபராக இருந்த போது ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் மீது ஏன் இராணுவ நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அப்போது சூழல் வேறு மாதிரி இருந்தது என முஷராஃப் பதில் அளித்தமை குறிப்பிடத்தக்கது.
-4tamilmedia.com

























