அயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்

அயோத்தி பாபர் மசூதி-ராமஜென்ம பூமி நில உரிமையியல் வழக்கில் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக ஒரு மத்தியஸ்தர்கள் குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழுவின் உறுப்பினர்களாக ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தி இதுவரை…

முன்னதாக அயோத்தியில் உள்ள பாபர் மசூதி-ராம ஜென்மபூமி, தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை நிர்மோஹி அக்காரா, சுன்னி மத்திய வக்ஃபு வாரியம், ராம்லல்லா விரஜ்மான் ஆகிய மூன்று அமைப்புகள் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அயோத்தி விவகாரம்: மத்தியஸ்தர்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2011ஆம் செப்டம்பரில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மேல் முறையீடு செய்தன. மொத்தம் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதன் பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றார்.

அந்த மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அப்போது, இந்த மனுக்களைப் புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி?

அதற்கடுத்து, கடந்த ஜனவரி 8ஆம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அமர்வு அறிவிக்கப்பட்டது.

ஆனால், அயோத்தி வழக்கை விசாரிக்க இருந்த 5 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி லலித் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அடுத்த சில நாட்களிலேயே அறிவித்தார்.

(இடமிருந்து வலமாக) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இப்ராஹிம் கலிஃபுல்லா, ஸ்ரீராம் பஞ்சு
(இடமிருந்து வலமாக) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இப்ராஹிம் கலிஃபுல்லா, ஸ்ரீராம் பஞ்சு

இதையடுத்து, இந்த வழக்கு பிப்ரவரி 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மத்தியஸ்தர் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமா என்பது குறித்து மார்ச் 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் விசாரணை நடந்தபோது, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமையை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்க்க தங்கள் தரப்பு மத்தியஸ்தர்கள் பெயர்களைப் பரிந்துரை செய்ய, நிலத்தின் உரிமையைக் கோரும் மூன்று தரப்பினரிடமும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

மத்தியஸ்தம் ரகசியம்

மத்தியஸ்தம் செய்வதற்கு முடிவெடுத்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் மத்தியஸ்தம் முழுவதும் ரகசியமாக நடக்கவேண்டும். அங்கு நடப்பவற்றைப் பற்றி, அச்சு, காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிடக்கூடாது என்று தெரிவித்தது.

யார் இந்த இப்ராஹிம் கலிஃபுல்லா?

முன்னாள் நீதிபதி பக்கிர் முகமதுவின் மகனான இப்ராஹிம் கலிஃபுல்லா, 1951ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் காரைக்குடி பகுதியில் பிறந்தார். 1975ஆம் ஆண்டு வழக்குரைஞராக பதிவு செய்த இவர், 2000ஆவது ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பிறகு 2011ஆம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட கலிஃபுல்லா, அடுத்த சில மாதங்களிலேயே அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற இவர், கடந்த 2016ஆம் ஜூலை 22ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். -BBC_Tamil

TAGS: