ஜம்மு பஸ் நிலைய குண்டு வெடிப்பு: 16 வயது சிறுவன் சிக்கினான்

ஜம்மு: ஜம்மு பஸ் ஸ்டாண்டில், கையெறி குண்டு வீசியது, 16 வயதுக்குட்பட்ட சிறுவன் என்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் நடந்த கையெறி குண்டு வீச்சில், இரண்டு பேர் பலியாகினர்; 32 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, போலீசார் ஒருவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

50 ஆயிரம் ரூபாய்:

விசாரணையில் அவன் கூறியதாவது: நான், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். என் தந்தை, பெயின்டர். எனக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இந்த வெடிகுண்டை, ஜம்மு பஸ் ஸ்டாண்டில் வீசினால், 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினர்; அதனால் தான் வீசினேன். இவ்வாறு அவன் கூறினான்.

பயங்கரவாதி கைது:

இந்த சிறுவனிடம் வெடிகுண்டை வழங்கிய, ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி முசாமில் என்பவனையும், போலீசார் கைது செய்துள்ளனர்; விசாரணையில், அவன் கூறியதாவது: குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஸ்புல் பயங்கரவாதி பயாஸ் என்பவன், என்னிடம் வெடிகுண்டை கொடுத்து, அதை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் எறியும்படி கூறினான். எனக்கு பயமாக இருந்ததால், அந்த வெடிகுண்டை சிறுவனிடம் கொடுத்து, ஜம்மு பஸ் ஸ்டாண்டில் எறியும்படி கூறினேன். இவ்வாறு அவன் கூறினான்.

-dinamalar.com

TAGS: