காசியாபாத்: பயங்கரவாதத்தால், நாடு அனுபவித்தது போதும். இனியும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் வரை நாட்டை வைத்திருக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய தொழில்பிரிவு பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்) உருவாக்கப்பட்டு 50 வது ஆண்டு விழா உ.பி.,யின் காசியாபாத்தில் நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
பயங்கரவாதத்தால், நாடு அனுபவித்தது போதும். இனியும், நாடு பாதிக்கப்படும் வரை வைத்திருக்க முடியாது. நமது அண்டை நாடு விரோதத்துடன் உள்ளது. நம்முடன் போர்புரியும் அளவுக்கு , அந்நாட்டிற்கு தகுதி இல்லை.
எல்லை கடந்து உள்நாட்டில் இருந்து அண்டை நாட்டுக்கு ஆதரவும் அளிக்கப்பட்டு, சதித்திட்டமும் வகுக்கப்படுகிறது. இதுபோன்ற கடினமான நேரங்களில் தேசத்தின் பாதுகாப்பு என்பது சவாலான விஷயமாக உள்ளது. இதனால், பயங்கரவாதிகளை எதிர்கொள்ள சில நேரங்களில் அரசு கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள உள்ள சிஐஎஸ்எப் வீரர்களின் பணி, விஐபிக்களை பாதுகாக்கும் பணியை விட கடினம். நீங்கள் வாயிலில் மட்டும் நிற்கவில்லை. நாட்டின் வளர்ச்சியில் உங்களது பங்கை அளிக்கிறீர்கள்.
விஐபி கலாசாரம் சில நேரங்களில் தேசத்தின் பாதுகாப்பு முறைகளில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி விடுகிறது. இதனால், சில நேரங்களில் அரசு குறிப்பிடத்தக்தகுந்த முடிவுகள் எடுத்து கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
-dinamalar.com