சென்னை: தமிழகத்தையே கொந்தளிக்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய சில மணி நேரங்களிலேயே அதை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவிகளையும் பிழைப்புக்காக சிறிய கடைகளில் பணிக்கு செல்லும் இளம்பெண்களையும் காதல் வலையில் சிக்க வைத்து கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தும் விசாரணை மந்தகதியில் நடப்பதாக பல்வேறு தரப்பினர் புகார் கூறினர்.
இதில் அரசியல் கட்சியினரின் வாரிசுகளுக்கு தொடர்பிருப்பதாலேயே விசாரணை மந்தகதியில் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் குதித்துள்ளனர். பல்வேறு பிரமுகர்களும் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய பிரமுகரின் மகன்களுக்கு தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதனாலேயே வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், கண்டனங்கள் என பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.