பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவ , மாணவியர் போராடி வருகின்றனர்.
இன்று காலை கோவை அரசு சட்டக்கல்லூரி முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலைப்பட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.
நேற்று கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வாயிலின் முன்பு போராட்டத்தினை நடத்தினர்.
மேலும், நேற்று பொள்ளாச்சியில் ,அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர் , நகராட்சி அலுவலகம் முன்பு திரளாக கூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு வந்தனர். வஜ்ரா தண்ணீர் பீச்சும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. காவல் துறையினர் மாணவர்களை கலைந்து போகும்படி கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், மாணவர்கள் போராட்டத்தினை தொடர்ந்ததால் , அவர்களை இழுத்து கூட்டத்தில் இருந்து வெளியேற்றி கூட்டத்தினை கலைத்தது காவல்துறை. மாணவர்கள் நாளையும் போராட்டத்தினை தொடர்வதாக கூறியிருந்த நிலையில் இன்று பொள்ளாச்சி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை , புகார் செய்ததற்காக தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட நாகராஜ் , ஒரே நாளில் பிணையில் வெளியில் விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகராஜை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்று கோரி பொது மக்கள் சிலர், நாகராஜுக்கு சொந்தமான டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கினர்.
‘பார்’ நாகராஜ் உள்ள பாலியல் துன்புறுத்தல் வீடியோ வெளியாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால்,அந்த வீடியோவில் இருப்பது பார் நாகராஜ் அல்ல, பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதாகியுள்ள சதீஷ் என்று தெரிவிக்கப்படுகிறது.
காவல் துறையினர் இந்த வழக்கில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல தரப்பினரும் கூறி வந்த நிலையில் , இந்த வழக்கு சிபி சிஐடி-க்கு மாற்றப்பட்டது. தற்போது பொள்ளாச்சியில் சிபி சிஐடி பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை மாலை நான்கு மணி அளவில் பொள்ளாச்சியில் பல அமைப்பினர் இணைந்து நடத்தும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: சி.பி.ஐக்கு மாற்றிய தமிழக அரசு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து, அதனை வீடியோ படமாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பிப்ரவரி மாதத்தில் வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் சபரீஷ், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் புகார் தெரிவித்த பூபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் செந்தில், பாபு, மணி, வசந்தகுமார், நாகராஜ் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் கோபமும் எழுந்தன. மாணவர்களும் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.
பிறகு இந்த வழக்கு மார்ச் 12ஆம் தேதி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டது. இருந்தபோதும் வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்ற வேண்டுமென கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கு மிகக் கடுமையான குற்றங்களை உள்ளடக்கியதாக இருப்பதாலும் சமூக வலைதளங்களிருந்து ஆதாரங்களைத் திரட்ட வேண்டியிருப்பதாலும் வழக்கை மாநில குற்றப் பிரிவு புலனாய்வுத் துறையிலிருந்து மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. -BBC_Tamil