பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே இன்று (வெள்ளிக்கிழமை) திருநங்கைகள், பெண்கள், ஆண்கள் ஒன்று சேர்ந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
”பெண்ணின் ஒழுக்கம் மட்டும் பேசாதே – ஆணுக்கும் ஒழுக்கம் உண்டு மறவாதே” உட்பட பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியுள்ளனர்.
எழுத்தாளர்கள் தமிழ் செல்வன், ஆதவன் தீட்சண்யா, உ. வாசுகி, மற்றும் திருநங்கை கல்கி ஆகியோர் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தமிழக அரசாங்கம் குற்றம்சாட்டியவர்களைக் காப்பாற்ற முயற்சித்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த போராட்டம் குறித்து திருநங்கை செயற்பாட்டாளரான கல்கி பிபிசி தமிழிடம் பேசுகையில், ”பொள்ளாச்சியில் இன்று பெண்கள், திருநங்கைகள், ஆண்கள் என சமூகத்தின் பலதரப்பிட்டனரும் இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினோம்” என்று குறிப்பிட்டார்.
”பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிடாமல் அரசு கவனமாக இருக்கவேண்டும்” என்றார்.
சிபிசிஐடி போலீசார் இதனை விசாரிக்கின்றனர். இதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்த கல்கி, ”கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை பாதுகாக்காமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இன்று உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை தமிழகத்துக்கு வந்திருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
”பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த ஒரு திருநங்கையாக கூறுகிறேன். இது போல ஒரு அவலம் இங்கு நடைபெறும் என்று நான் நினைத்து பார்த்ததில்லை” என்று தனது ஆதங்கத்தை அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, நேற்று பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவ , மாணவியர் போராட்டம் நடத்தினர்.
கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வாயிலின் முன்பு போராட்டத்தினை நடத்தினர்.
மேலும், நேற்று பொள்ளாச்சியில் ,அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர் , நகராட்சி அலுவலகம் முன்பு திரளாக கூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு வந்தனர். வஜ்ரா தண்ணீர் பீச்சும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. காவல் துறையினர் மாணவர்களை கலைந்து போகும்படி கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். -BBC_Tamil
முதலில் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் !!!
பிறகு வாயில் விரலை வைத்தால் சப்ப கூட தெரியாத அப்பாவிகள் என விடுதலை செய்ய கோரி போராட்டம் !!!
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதைபோல !!!