பெங்களூரு: கிராமத்து இளைஞரின் முயற்சியால் மீண்டும் உயிர்பெறும் நகர்ப்புற ஏரிகள்

பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி என்பது, உலகிலுள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்திய முகவரி போன்றது .

கான்கீரிட் கட்டடங்களுக்கு இடையில் சுமார் ஐந்து கி.மீ தொலைவில் “காய்சனஹள்ளி ” என்ற கிராமம் உள்ளது.

அங்கு சுமார் 36 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஏரி நீர்வாழ் உயிரினங்கள், காடு போன்று மரங்கள், பறவை இனங்கள் என கண் குளிர காட்சி தரும் பகுதியாக உள்ளது..

இந்த காட்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் காண முடிகிறது. இதற்கு முன்பு 36 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தண்ணீர் இருந்தது.

மற்ற நிலபரப்பில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடவும், ஆக்கிரமிப்பு செய்து சிலர் விவசாயம் செய்யும் பயன்படுத்தி வந்தனர்.

இன்று இந்த அளவிற்கு மாற்றம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர், ஆனந்த் மல்லிகாவத் என்ற இளைஞர். இந்த காய்சனஹள்ளி ஏரியின் மாற்றம், தற்போது அழியும் நிலையில் உள்ள மற்ற ஏரிகளையும் புதுப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

1960ம் ஆண்டு ஆய்வுபடி, பெங்களூரில் சுமார் 262 ஏரிகள் இருந்தன. இன்றைய நிலையில் 81 ஏரிகள் மட்டுமே உள்ளன. அதில் 34 ஏரிகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன.

நகரமயத்தால் தன் இயற்கை வளத்தை இழந்து வரும் பெங்களுர் நகரத்தில் உள்ள மற்ற 45 ஏரிகளை 2025-க்குள் புதுபிக்க இலக்கு வைத்துள்ளார் ஆனந்த் மல்லிகாவத்.

2017-ம் ஆண்டு ஆனந்த் மல்லிகாவத் “சன்சேரா” என்ற ஆட்டோமொபைல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூக பொறுப்பு (சி. எஸ். ஆர் ) துறையின் திட்ட தலைவராக இருந்து வந்தார்.

காய்சனஹள்ளி ஏரிக்கு அருகில்தான் ஆனந்தின் வீடு அமைந்துள்ளது. தினமும் இந்த ஏரி வழியாகத்தான் அலுவலகம் செல்வார். அந்த ஏரி சீரழிந்து வருவதை கண்டு மனம் வருந்துவார்.

பெங்களூருக்கு அருகில் ஏரியை தூர்வாரி சோலைவனமாகிய கிராமம்

சன்சேரா நிறுவனம் தனது சி.எஸ். ஆர் நிதியில் இந்த ஏரியை புதுபிக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்த ஏரியை புதுப்பிக்க , எவ்வளவு ரூபாய் தேவைப்படும் என்று, ஏரிகளை புதுபிக்கும் அரசு நிறுவனங்களிடம் ஆனந்த் கேட்டறிந்தார்.

சுமார் 10 முதல் 15 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என்ற தகவல் அவருக்கு அதிர்ச்சி அளித்தது. ஏரிகளை புதுப்பிக்க என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார்.

இவர் படித்த தொழில் நுட்பக்கல்வி அதற்கு உறுதுணையாக இருந்தது. சன்சேரா நிறுவனம் மற்றும் காய்சனஹள்ளி மக்கள் துணையுடன் ஏப்ரல் 20-ம் தேதி 2018ல் இந்த ஏரியை புதுப்பிக்கும் பணியில் இறங்கினார்.

“காய்சனஹள்ளில் உள்ள 400-க்கும் மேலான குடும்பங்கள் பெரிய அளவில் உதவி செய்தனர். ஏரியை புதுப்பித்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்து கூறினோம். அவர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த நிலத்தை திரும்ப ஒப்படைத்து, சுற்றியுள்ள நிலப்பரப்பு குறித்த விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பெங்களூரில் உள்ள பல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் மரங்களை நட்டனர். நான்கு லட்சம் கனமீட்டர் அளவு மண் தூர்வாரப்பட்டது, 45 நாட்களில் ஏரி முழுமையாகத் தயாராகிவிட்டது,” என்று ஆனந்த் மல்லிகாவத் கூறினார். தற்போது வெயில் காலம் துவங்கிவிட்ட போதிலும் சுமார் எட்டு அடி ஆழத்துக்கு இந்த ஏரியில் நீர் உள்ளது.

ஏரியால் ஏற்பட்ட நன்மைகள்

“காய்சனஹள்ளியில் உள்ள 186 ஆழ்துளை கிணறுகளில் நீர் ஊற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பயனடைந்துள்ளனர் ” என்று கூறுகிறார் எல்லப்பா என்ற விவசாயி.

“வெயில் காலத்தில் கால்நடைகள் இங்கு வந்து தாகம் தணித்து செல்கின்றன. சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் ஏரி கரையை நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்” என்கிறார்.

பெங்களூருக்கு அருகில் ஏரியை தூர்வாரி சோலைவனமாகிய கிராமம்

செளரிபா காய்சனஹள்ளி கிராமத்து பெண். “எங்கள் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. முன்பு இந்த ஏரி வறண்டு இருக்கும். தற்போது நீர் மட்டம் உயர்ந்துள்ளது மட்டுமல்ல. பறவைகள் அதிகமாகி, செடிகள் வளர்ந்து பசுமையாக உள்ளது. இதனால் வரும் காலங்களில் மழை அதிகரிக்கும் என நினைக்கிறோம் ” என்று கூறினார்.

காய்சனஹள்ளி ஏரியை புதுப்பித்ததால் கிடைத்த நன்மைகள், ஏரிகளை புதுபிக்கும் பணியை முழு நேர பணியாக மேற்கொள்ள ஆனந்த் மல்லிகாவத்துக்கு ஊக்கம் அளித்துள்ளது.

பெங்களூருக்கு அருகில் ஏரியை தூர்வாரி சோலைவனமாகிய கிராமம்

“கடந்த 20 ஆண்டுகள் எனக்காக வாழ்ந்தேன். அடுத்த ஐந்து ஆண்டுகள் பூமிக்காக வாழவுள்ளேன்” என்கிறார் அவர்.

“தன்னார்வ தொண்டு நிறுவனம் உருவாக்க எண்ணம் உள்ளதா?” என்று கேட்டதற்கு, “இல்லை. ஓர் அமைப்பை நிறுவினாலோ அல்லது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தாலோ அது என்னை கட்டுபடுத்தும் என நினைக்கிறேன். ஏரிகளை புதுப்பிக்கும் எண்ணம் உள்ளவரோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறுகிறார் ஆனந்த்.

பல நிறுவனங்கள் ஆனந்த்துக்கு உதவ முன் வந்துள்ளன. சன்சேரா நிறுவனம் மட்டுமல்லாது வேறு சில நிறுவனங்களும் சமூக பொறுப்புத் திட்டத்தின்கீழ் உதவ முன்வந்துள்ளன.

“நான் கிராமத்தில் பிறந்தவன். என்னால் ஏரிகளை புதுபிக்க முடியும்போது எல்லோராலும் முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை,” என்கிறார் ஆனந்த். -BBC_Tamil

TAGS: