பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியாவில், பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பெரிய பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி நிருபர்களிடம் கூறுகையில், பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் பதற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஜெய்ஷ் – இ – முகமது, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகள், இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்தினால்,பாகிஸ்தான் மிகப்பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும். இதனால், பதற்றம் அதிகரித்து இரு நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் எனக்கூறினார்.

மேலும் அவர், பாலகோட்டில், இந்திய தாக்குதலுக்கு பின் பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸதான் நடவடிக்கை எடுப்பதை அமெரிக்காவும் சர்வதேச நாடுகளும் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால், முன்னதாகவே ஏதும் கூற முடியாது. பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சில பயங்கரவாத குழுக்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் அலுவலகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

-dinamalar.com

TAGS: