நரேந்திர மோதி:‘விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது இந்தியா’

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ள உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏவுகணை செயற்கைக்கோளை மூன்று நிமிடங்களில் துல்லியமாக சுட்டு வீழ்த்தியதாக அவர் தெரிவித்தார்.

#MissionShakti என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளித் திட்டம் முழுவதும் இந்தியத் தொழில்நுட்பங்களைக் கொண்டே செய்லபடுத்தப்பட்டது என்றார் மோதி.

இந்தியா ‘லோ எர்த் ஆர்பிட் சேட்டிலைட்’ எனப்படும் தாழ்வான உயரத்தில் பறக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், இந்தியா ஒரு விண்வெளி வல்லரசாக ஏற்கனவே உருவெடுத்துள்ளது என்றும் தனது உரையில் மோதி குறிப்பிட்டார்.

இந்திய விஞ்ஞானிகள் குறித்து நமது பெருமை என்றும் பூமியை நேரலையாக கண்காணிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஆற்றிய உரையில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோதி

பூமியின் மேல் பரப்புக்கு மேல் 400 முதல் 1000 மைல் தொலைவில் வட்டமிடும் செயற்கைக்கோள்கள் ‘லோ எர்த் ஆர்பிட்ஸ்’ எனப்படும்.

இன்று காலை 11.45 மணி முதல் 12.00 மணி வரை நாட்டு மக்களுக்கு உரையாற்றப்போவதாக அவர் முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தனது உரையை கேட்குமாறு அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

12.15 மணிக்கு மேல் உரையை தொடங்கிய அவர், இந்திய விண்வெளி துறையின் சாதனைகள் குறித்து பேசினார்.

நடத்தை விதி மீறப்பட்டதா?

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் இத்தகைய அறிவிப்பு ஒன்றை பிரதமர் வெளியிட்டிருப்பது நடத்தை விதிகளை மீரியதாகுமா என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் பிபிசி தமிழ் கேட்டது.

“பிரதமர் மோதி பேசியிருப்பது நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயம். இது குறித்து தேர்தல் நடத்தை விதிமுறைகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் பிரதமராகவே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் இது விதிமீறலாகத் தோன்றவில்லை. எனினும், தேர்தல் ஆணையம் இதை ஆராய வேண்டும்,” என்றார்.

ராணுவ மயமாகும் விண்வெளி

ஜொனாதன் மார்கஸ், ஆசிரியர், பிபிசி பாதுகாப்பு பிரிவு.

குடிமை மற்றும் ராணுவப் பயன்பாடு ஆகிய இரு நோக்கங்களுக்காகவும் வல்லரசு நாடுகள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறன.

உளவு, கண்காணிப்பு, வழிகாட்டி உள்ளிட்ட நோக்கங்களுக்காக பல நாடுகளும் செயற்கைக்கோள்களை பயன்படுத்துவதால் அவை அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளன.

செயற்கைக்கோள்களை இடைமறித்துத் தாக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள மிகச்சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. விண்வெளியை ராணுவ மயமாக்கும் போக்கின் இன்னொரு அங்கமாகவே இது உள்ளது.

விண்வெளியை ராணுவ மயமாக்குவதை தடுக்க அழைப்பு விடுக்கும் செயல்பாட்டாளர்கள், தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்த இந்தச் செய்தி வழிவகை செய்யும்.

கிண்டல் செய்த ராகுல்

டி.ஆர்.டி.ஓ -வுக்கு வாழ்த்துகளை கூறி உள்ள ராகுல் காந்தி, கிண்டல் செய்யும் விதமாக பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். -BBC_Tamil

TAGS: