‘வறிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 இந்திய ரூபாய்கள்’

தமக்கு வாக்களிக்கப்பட்டு மீண்டும் பதவிக்கு வந்தால், இந்தியாவின் வறிய குடும்பங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தலா 72,000 இந்திய ரூபாய்களை வழங்கவுள்ளதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் தெரவித்துள்ளார்.

வறுமை மீதான இறுதித் தாக்குதல் என குறித்த விடயத்தை வர்ணித்த ராகுல் காந்தி, குறித்த திட்டத்தின் மூலம் இந்தியாவிலுள்ள 1.3 பில்லியன் பேரில் 250 மில்லியன் பேர் பயனடைவர் எனக் கூறியுள்ளார்.

அடுத்த மாதமும், அதற்கடுத்த மாதமும் இடம்பெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வடிவத்தில் கடுமையான போட்டியாளரை எதிர்கொள்ளும் ராகுல் காந்தி, தாங்கள் அனைத்து கணக்கிடல்களை மேற்கொண்டதாகவும், தாங்கள் சிறந்த பொருளியல் நிபுணர்களை வினவியதாகவும் தெரிவித்ததுடன், அவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் தங்களை ஆதரித்ததாகவும், இதைத் தாங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் குறித்த அறிவிப்பை குறைவான தரவுகளைக் கொண்ட வாக்குச் சேர்க்கும் ஏமாற்று வித்தை என பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி நிராகரித்துள்ளது.

இச்சந்தர்ப்பத்தில், மாதாந்தம் 12,000 இந்திய ரூபாய்களுக்கு குறைவான வருமானம் பெறும் எந்தக் குடும்பமும், அதன் வங்கிக் கணக்கில் 6,000 இந்திய ரூபாய்களை ஒவ்வொரு மாதமும் பெறும் என காங்கிரஸின் தரவு ஆராய்ச்சி திணைக்களத்தின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

-tamilmirror.lk

TAGS: