தமிழக அரசு மருத்துவமனைகளின் அவலம்.. அசுத்த ரத்தம் ஏற்றி 15 கர்ப்பிணிகள் பலி? ஆய்வுக்கு குழு அமைப்பு

சென்னை: தருமபுரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அசுத்த ரத்தம் ஏற்றப்பட்டதால் கர்ப்பிணிகள் 15பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

அசுத்த ரத்தம் காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. தர்மபுரி, ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக அந்த செய்தி மேலும் தெரிவித்தது.

பாதுகாக்கப்பட்ட அறையில் வெப்பநிலை மாறுபாடு ஏற்பட்டதால், ரத்தம் மாசுபாடு அடைந்திருந்ததாகவும், கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்புக்கு இந்த அசுத்தமான ரத்தமே காரணம் என்றும் மூத்த மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர், சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவ கல்வியக இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, இந்த புகாரை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளது. தமிழக ஊரக நலப்பணி இயக்ககம் மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககம் இணைந்து ஐந்து பேர் கொண்ட அந்தக் குழுவை அமைக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: