குறைந்தபட்ச வருமான திட்டம்: சிதம்பரம் விளக்கம்

சென்னை : காங்.,கின் தேர்தல் அறிக்கையில் ஏழைகள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும் என்ற திட்டம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை காங்., அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிதம்பரம், போதுமான அளவிற்கு பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே குறைந்தபட்ச வருமானம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்தும் அளவிற்கு இந்தியாவிடம் திறன் உண்டு என அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற திட்டங்களை படிப்படியாகத் தான் அமல்படுத்த முடியும்.

இந்திய குடும்பங்களில் 20 சதவீத ஏழைகள் கண்டறியப்பட்டு, குறைந்தது 5 உறுப்பினர்களை கொண்ட 5 கோடி குடும்பங்களுக்கு இந்த திட்டம் கொண்டு செல்லப்படும். இத்திட்டத்தால் இந்தியாவில் உள்ள 25 கோடி பேர் பயனடைவார்கள். இந்தியாவின் தற்போதைய பொருளாதாரம் ரூ.200 லட்சம் கோடி. இது சராசரியாக ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரிக்கும். 6 ஆண்டுகளில் இது இருமடங்காகும். 2019 -2024 வரையிலான 5 ஆண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி ரூ.200 லட்சம் கோடியில் இருந்து ரூ.400 லட்சம் கோடியாக உயரும்.

இத்திட்டத்திற்கான செலவான ரூ.60 லட்சம் கோடியை இந்திய அரசும், மாநில அரசும் இணைந்து வழங்கும். மத்திய – மாநில அரசுகளின் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் 18 சதவீதம் அதிகரிக்கும். அதனால் தான் இத்திட்டத்தை அமல்படுத்தும் திறன் இந்தியாவிடம் உள்ளது என நம்புகிறோம்.

மக்கள் அனைவரையும் வறுமை கோட்டிற்கு மேல் கொண்டு வருவோம். இதற்கு தேவையான நிதி உதவியை மாநில அரசுகளுக்கு செய்வோம். ஒவ்வொரு மாதமும் 5 கோடி குடும்பத்திற்கு ரூ.6000 வீதம் ஆண்டுக்கு 72,000 ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்துவோம் என்றார்.

-dinamalar.com

TAGS: