காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோதியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் உண்டான சேதங்களை சீர் செய்து, பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வருவோம் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகளில் மோதியின் பொருளாதார கொள்கைகள் தோல்வி அடைந்துள்ளதாகவும், இதனால் முறைசாராத் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் 2019-ல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுமானால் உலகிலேயே ‘மிக பெரிய குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை’ உருவாக்குவோம் என்று ராகுல் காந்தி உறுதி அளித்திருந்தார். “நியாய்” (நீதி) என்று இத்திட்டம் அழைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
- இந்திய மக்களவை தேர்தல் 2019: 50 மில்லியன் குடும்பங்களின் வருவாய்க்கு வாக்குறுதியளிக்கும் காங்கிரஸ்
- அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: உறுதிமொழியை நிறைவேற்றினாரா நரேந்திர மோதி?
“நியாய் திட்டத்தின் இலக்கு இரண்டு பிரிவுகளை கொண்டிருக்கிறது. ஒன்று இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதமுள்ள ஏழைகள் ஆண்டுக்கு ரூ. 72, 000 பெறுவார்கள். மற்றொன்று பிரதமர் மோதி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சரி செய்வோம்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
“இத்திட்டத்திற்கு நியாய் என்று பெயர் வைக்க மற்றொரு காரணமும் இருக்கிறது என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, கடந்த ஐந்தாண்டுகளில் நரேந்திர மோதி ஏழைகளிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டு, எதையும் திருப்பித் தரவில்லை. விவசாயிகளிடம் இருந்து, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களிடம் இருந்து, வேலையில்லா இளைஞர்களிடம் இருந்து, நாட்டின் தாய்மார்களிடம் இருந்த சேமிப்புகள் என அனைவரிடம் இருந்தும் பறித்து கொண்டுள்ளார். இவ்வாறு இந்தியாவின் ஏழை மக்களிடம் இருந்து அவர் பறித்தவற்றை நாங்கள் திருப்பித் தருவோம்” என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு பல பொருளாதார நிபுணர்கள், வல்லுநர்கள், இதனை நன்கு ஆராய்ந்த பிறகுதான் தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் மக்களைக் ஈர்ப்பதற்காக ஒரு நடவடிக்கை என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “சில விமர்சகர்கள் கூறுவதுபோல இது ஜனரஞ்சக நடவடிக்கை இல்லை” என்றார்.
“15 பேருக்கு 3.5 லட்சம் கோடி ரூபாயை பிரதமர் மோதி வழங்கியது ஜனரங்கமாக கருதப்படவில்லை என்றால், ஏழைகள் நலனுக்காக கொண்டுவரப்படும் இத்திட்டத்தினை ஏன் அவ்வாறு கூற வேண்டும். மோதியின் அரசாங்கத் திட்டங்களால் அவரது பணக்கார நண்பர்கள் மட்டுமே பயன்படுகிறார்கள். நான் இந்தியாவின் ஏழைகளுக்கான நியாயத்தை கேட்கிறேன், இதில் ஜனரஞ்சகம் ஏதும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தொழில் தொழில் தொடங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசிடம் அவர்கள் அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“நீரவ் மோதிக்கு மட்டும்தான் ஆயிரக்கணக்கான கோடிகள் கிடைக்க வேண்டுமா? இந்தியாவில் எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன? இளைஞர் ஒருவர் தொழில் தொடங்க வேண்டுமானால் தொடங்கட்டும். 2000 பேருக்கு வேலைவாய்ப்பு தரட்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசிய ராகுல் காந்தி, “நாங்கள் கண்மூடித்தனமாக எதையும் செய்ய மாட்டோம். பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி-யை நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் செய்தது போல நாங்கள் செய்ய மாட்டோம். நியாய் திட்டம் முறையாக கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதனை நிச்சயம் நிறைவேற்ற முடியும்” என்றார். -BBC_Tamil