உணவு சரியில்லை என புகார் வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர்.. வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டி!

டெல்லி: உணவு சரியில்லை என பேஸ்புக்கில் வீடியோ மூலம் புகார் கூறிய ராணுவ வீரர் வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த தேர்தலை போல் இந்த முறையும் வாரணாசியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து 100 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் எல்லை கட்டுப்பாட்டு வீரர் தேஜ் பகதூர் யாதவ் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புகார்

தேஜ் பகதூர் யாரென்று பார்த்தோமேயானால் அவர் எல்லைக் கட்டுப்பாட்டு வீரர் ஆவார். கடந்த 2017-ஆம் ஆண்டு ராணுவத்தில் தரமற்ற உணவு விநியோகிக்கப்படுவதாக புகார் அளித்திருந்தார்.

சமூகவலைதளம்

எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு தரமான மற்றும் போதிய உணவு வழங்கப்படவில்லை என்று எல்லை பாதுகாப்புப் படையின் 29-வது பிரிவை சேர்ந்த வீரர் டி.பி.யாதவ் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

வீடியோ

அதில் அவர் கூறுகையில் ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவு பொருள்களே வழங்கப்படுகிறது. தரமான உணவு பொருள்களை அரசு கொடுத்தாலும் அவற்றை உயரதிகாரிகள் விற்று விடுகின்றனர். இதனால் பல நாட்கள் உணவில்லாமல் வீரர்கள் உறங்க செல்லும் நிலை ஏற்படுகிறது என புகார் வீடியோவை வெளியிட்டார்.

துணிவு

தனக்கு பதவி உயர்வு கிடைக்காததால் விரக்தியில் இதுபோன்ற புகாரை தேஜ் பகதூர் கூறியதாக அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர். இதையடுத்து தேஜ் பகதூர் விருப்ப ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் அவர் சுயேச்சையாக மோடியையே எதிர்க்க துணிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றும் செய்யவில்லை

இதுகுறித்து தேஜ் பகதூர் யாதவ் கூறுகையில் என்னுடைய லட்சியம் தேர்தலில் தோற்பதோ ஜெயிப்பதோ இல்லை. பாதுகாப்பு படைகளுக்கு இந்த அரசு எதையும் செய்யவில்லை. வீரர்கள் பெயரில் வாக்கு கேட்கும் பிரதமர் மோடி அந்த வீரர்களுக்காக எதையும் செய்யவில்லை என்றார்.

tamil.oneindia.com

TAGS: