குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களை நால்வகையாகப் பிரிக்கிறது தொல்காப்பியம்.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிவது பாலை என்கிறது சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதை. அதாவது, முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை இல்லாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக கருதப்படும்.
மக்களவைத் தேர்தலின் பொருட்டு மக்களின் குறைகள் தேவைகள் குறிப்பாக தேர்தல் குறித்து அவர்களது மனநிலை குறித்து அறிய இந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பிபிசி தமிழ் பயணித்தது.
மலைகளுக்கு வாக்கு இயந்திரங்களை கழுதையில் எடுத்து செல்லும் சின்னராஜ், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் சிற்றூர் (குறிஞ்சி), வாழ்வாதாரத்திற்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள் (மருதம்), பூச்சிக் கொல்லியால் இறந்த விவசாயி குடும்பத்தினர் (முல்லை), உப்பளம் அருகே கழிப்பறை இல்லாமல் தவிக்கும் மக்கள் (நெய்தல்) என்று பலரை சந்தித்தோம்.
திணை: குறிஞ்சி இடம் : தருமபுரி
தருமபுரி மாவட்டம் வட்டுவனஹள்ளி பஞ்சாயத்தில் இருக்கும் கோட்டூர் மலை கிராமம் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறது. தங்களது பல தசாப்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் அம்மக்கள்.
மரண வழி பாதை
வாழ்வில் பலருக்கு சாதாரணமாக இருப்பது, எளிதாக கிடைப்பது வேறு சிலருக்கு அசாதரணமான இருக்கும்.
அப்படி நமக்கு சாதாரணமாக இருக்கும் சாலை இவர்களுக்கு பல்லாண்டு கனவு.
அந்த கனவை நிஜமாக்கதான் தேர்தலை புறக்கணிக்க கோட்டூர்மலை மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
சாலை இல்லாத காரணத்தினால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பலர் இறந்திருக்கிறார்கள் என்கிறார்கள் அம்மக்கள்.
கோட்டூர்மலையை சேர்ந்த மகேஷ்வரி, “பத்தாண்டுகளுக்கு முன்பு என் தம்பியை பாம்பு கடித்துவிட்டது. தூரி கட்டிதான் அவனை மலைபாதை வழியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாதததால் அவன் இறந்துவிட்டான்.” என்கிறார்.
இது பத்தாண்டுகளுக்கு முந்தைய கதை மட்டும் அல்ல. இப்போதும் அதே நிலைதான் இங்கு தொடர்கிறது.
நாங்கள் அந்த மலைக்கு சென்றபோது தூரியில் ஒருவரை மருத்துவமனகுக்கு தூக்கி சென்று கொண்டிருந்தார்கள்.
அந்த மலை கிராமத்தில் மூந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் இந்தத் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
யார் இவர்கள்?
மாவட்ட அதிகாரிகள் தங்களை அலட்சியமாக அணுகுகிறார்கள். பின் ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்கிறார் அந்த கிராமத்தை சேர்ந்த முனிராஜ்.
அவர், “மாவட்ட நிர்வாகத்திடம் எங்கள் மலை கிராமத்திற்கு சாலை வேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்தால்… ‘கோட்டூர் மலையா?’ அப்படி ஒரு கிராமம் தருமபுரியில் இருக்கிறதா என்ன? என்று எங்களை அலட்சியமாக அணுகுகிறார்கள். பின் ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும்?” என்கிறார் முனிராஜ்.
“தேர்தலை புறக்கணிக்க போகிறோம் என்று சொன்னால், நீங்கள் என்ன நக்சலைட்டா என்று அச்சுறுத்துகிறார்கள் அதிகாரிகள். அடிப்படை வசதி கேட்டால் என்ன நக்சலைட்டா?” என்று வினவுகிறார் அவர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான மலர்விழியிடம் பேசினோம். அவர், “அந்தப் பகுதியில் உள்ள மலை கிராம மக்களிடம் மலையை விட்டு இறங்கி கீழே வாருங்கள். அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறோம் என்று கூறினோம். முதலில் ஒப்புக் கொண்டவர்கள் பின் மறுத்துவிட்டார்கள்” என்கிறார்.
இதுதான் எங்கள் நிலம்
கோட்டூர்மலையை சேர்ந்த முதியவரான பொன்னுசாமி, “எங்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், எங்களுக்கான வசதி வாய்ப்புகளை இங்கேயே ஏற்படுத்தி தாருங்கள். பல தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு வெளியேற மாட்டோம்” என்கிறார்.
இதுதான் இந்த மலைகிராமத்தின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.
சாலை வசதி இல்லாத காரணத்தினால் கழுத்தையில்தான் வாக்கு இயந்திரத்தை எடுத்து வருகிறார்கள் அதிகார்கள்.
எப்போது வாக்கு இயந்திரம் தார் சாலையில் வருகிறதோ அப்போதுதான் வாக்களிப்போம் என்கிறார்கள் அம்மக்கள்.
‘ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள்‘
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி மலர்விழி, “வனப் பகுதியில் இருப்பதால்தான் சாலை போடுவது சிக்கலாக இருக்கிறது. இப்போது அரசு அந்தப் பகுதியில் 6.7 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை அமைக்க சாலைக்கென ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்கிறார்.
மேலும் அவர், ‘நிச்சயம் அவர்கள் வாக்களிப்பார்கள். அரசு அதிகாரிகள் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்” என்கிறார்.
-BBC_Tamil