இந்தியாவின் செயற்கைக்கோள் அழிப்பு நடவடிக்கை சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதிக்கலாம் – நாசா

செயற்கைக்கோள் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியிருப்பதை ’மோசமான விஷயம்’ என்று தெரிவித்திருக்கும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இது அச்சுறுத்தலாக இருக்கு என்று கூறியுள்ளது.

10 நாட்களில் 44 சதவீதம் அதிகரித்திருக்கும் விண்வெளி குப்பைகள், சர்வதேச விண்வெளி நிலையத்தோடு மோதுகின்ற ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதாக நாசாவின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் கூறியுள்ளார்.

எனினும், சர்வதேச விண்வெளி நிலையம் பாதுகாப்பாகவே இருப்பதாகவும், மாற்றம் ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அதனை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோளை அழிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் 4வது நாடாக இந்தியா மாறியுள்ளது.

“மிஷன் சக்தி” என்கிற இந்த பரிசோதனை இந்தியாவை விண்வெளி வல்லரசாக மாற்றியுள்ளதாக கடந்த மார்ச் 27ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.

பணியாளர்களிடம் உரையாற்றுகையில், இத்தகைய செயற்கைக்கோள் அழிப்பு ஆயுதங்களை பரிசோதனை செய்வது பற்றி பிரிடென்ஸ்டைன் தீவிரமாக விமர்சித்துள்ளார்.

சுற்றுவட்டப்பாதையில் 400 கழிவுப்பொருட்களை நாசா இனம் கண்டுள்ளதாகவும், 60 துண்டுகள் 10 சென்டிமீட்டர் விட்டத்திற்கும் பெரிய அளவு உடையதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவற்றில் 24 துண்டுகளால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் சாத்தியம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விண்வெளி ஆய்வில் வல்லரசாக உருவெடுக்கிறதா இந்தியா?

“சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேலே செல்லக்கூடிய புவியின் சுற்றுவட்டப் பாதையில் விண்வெளி குப்பைகளை அனுப்புகிற பயங்கர நிகழ்வை இது உருவாக்கக்கூடியது என்பதால், இதுவொரு பயங்கரமான நடவடிக்கை. இத்தகைய நடவடிக்கை விண்வெளி வீரர்கள் எதிர்காலத்தில் விண்வெளியில் பயணம் மேற்கொள்வதற்கு சாதகமான நிலைமையை வழங்காது” என்கிறார் பிரிடென்ஸ்டைன்.

செயற்கைக்கோள் எதிர்ப்பு பரிசோதனையை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றிய ஒரு நாளுக்கு பின்னர், இந்த நிகழ்வு விண்வெளியில் குழப்பத்தை உருவாக்கலாம் என்றும், இதன் பாதிப்பு பற்றி அமெரிக்கா இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும் அமெரிக்க தற்காலிக பாதுகாப்பு செயலாளர் பேட்ரிக் ஷானாஹான் எச்சரிக்கை விடுத்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தோடு மோதுகின்ற விண்வெளி குப்பைகளை தோற்றுவிக்காத வகையில், 300 கிலோமீட்டர் உயரத்தில், பூமியின் மிகவும் தாழ்வான பகுதியிலேயே இந்த பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக இந்தியா கூறியுள்ளது.

இலங்கை
இலங்கை

“இதன் காரணமாகதான் பூமியின் மிகவும் தாழ்வான சுற்றுவட்டப்பாதையில் இருந்த செயற்கைக்கோளை அழித்துள்ளோம். விண்வெளி குப்பைகள் மிகவும் சீக்கிரமாக நீங்கிவிடும்” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான ஜி. சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.

இது சரி என்றும், படிப்படியாக இது நிகழும் என்றும் பிரிடென்ஸ்டைன் கூறியுள்ளார்.

2007ம் ஆண்டு இதே போன்ற பரிசோதனையை சீனா மேற்கொண்டது சர்வதேச அளவில் எச்சரிக்கையாக அமைந்தது. அப்போது ஏற்பட்ட பல விண்வெளி குப்பைகள் விண்வெளியிலேயே தங்கிவிட்டதாக நாசா தலைவர் தெரிவித்தார்.

சீனா செய்த சோதனையால் உருவாக்கியதாக தெரிவிக்கப்படும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி விண்வெளி குப்பைகள் உள்பட மொத்தம் 10 ஆயிரம் துண்டுகளை அமெரிக்க ராணுவம் கண்காணித்து வருகிறது.

விண்வெளி ராணுவமயமாவதை பற்றி ஆயுத தடுப்பு பரப்புரையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஏதாவது மோதல் ஏற்பட்டால், இந்தியாவிடம் இருக்கும் செயற்கைக்கோளை சுட்டு அழிக்கும் தொழில்நுட்பத்தால் எதிரியின் செயற்கைக்கோள்களை அழித்துவிட முடியும். இந்த பரிசோதனை பிராந்திய அளவில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் போட்டியை மேலும் அதிகரிக்கும்.

இந்த செயற்கைக்கோளை அழித்திருக்கும் செய்தி அறிவிப்பு இந்திய எதிர்க்கட்சிகளை கோபத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த அறிவிப்பை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தியிருப்பதாக அவை குற்றஞ்சாட்டியுள்ளன. -BBC_Tamil

TAGS: