பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய நாம் தமிழர் கட்சி: கவன ஈர்ப்பா, முன் மாதிரியா?

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 50 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்துள்ளது. இந்திய அளவில் ஒரு கட்சி சரி பாதி அளவில் பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பது இதுவே முதல் முறை.

தேர்தலில் பெண்களின் பங்களிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் பெண்களின் பங்கு 49.7 கோடி. அதாவது 48 சதவீதம். ஆனால், மக்களவையில் அவர்களின் பங்கு 11.8 சதவீதம் (64/543) என்ற அளவிலும், மாநிலங்களவையில் அவர்கள் பங்கு 11 சதவீதம். அதாவது, 27 பெண் உறுப்பினர்கள் என்ற அளவிலும் இருக்கிறது என்கிறது பன்னாட்டு நாடாளுமன்ற ஒன்றியம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கம் வழங்கும் தகவல்களின்படி மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருக்கிறது. அதாவது 1957ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்தி போட்டியிட்ட பெண்களின் சதவீதம் 1.4%. 2014 தேர்தலில் இது 6.97 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் வெற்றி தோல்விகளை கடந்து ஒரு கட்சி மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்குவது இயல்பாக முக்கியத்துவம் பெறுகிறது.

சமத்துவமின்மை நிலவுகிறது

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் காளியம்மாளிடம் பேசினோம். அவர், “இங்கு இயல்பாகவே ஒரு சமத்துவமின்மை நிலவுகிறது. ஏறத்தாழ 50 சதவீதம் பெண்கள் இருக்கும் ஒரு நாட்டில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பது சமூக அநீதி” என்கிறார்.

நாம் தமிழர் கட்சி செய்வது கவன ஈர்ப்பா அல்லது முன் மாதிரியா?

“நான் போட்டியிடும் வடசென்னை தொகுதியில் 14 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பெண்கள். அதாவது சரிபாதிக்கு மேல். ஆனால் அது வேட்பாளர்கள் சதவீதத்தில் பிரதிபலிக்கிறதா? இல்லைதானே.” என்கிறார்.

மேலும் அவர், “ஐம்பது சதவீதம் என்பதை அரசே சட்டமாக்க வேண்டும். இது சலுகை அல்ல; உரிமை. கவன ஈர்ப்புக்காக செய்யவில்லை. முன் மாதிரி அரசியலை நாம் தமிழர் கட்சி இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது” என்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இது கருத்தைத்தான் முன் வைக்கிறார். சீமான், “பெண்களுக்கான தனி தொகுதிகளை வழங்க வேண்டும். பெண்கள் கைகளுக்கு அதிகாரம் செல்ல அதுதான் வழி. எத்தனை காலம்தான் பாலின சமத்துவத்தை பேசிக் கொண்டே இருப்பது. அதை செயலில் காட்ட வேண்டும். பெண்கள் கைகளுக்கு அதிகாரம் செல்ல அதுதான் வழி,” என்கிறார்.

‘உழைக்கும் வர்க்கத்தினர்’

நாம் தமிழர் கட்சி செய்வது கவன ஈர்ப்பா அல்லது முன் மாதிரியா?

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், அக்கட்சியின் இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறோம் என்கிறார் மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி.

பெண்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் அவர்கள் பெண்களின் தேவைகள், பிரச்சனைகளை பிரதிபலிப்பார்கள் என நம்புகிறோம் என்கிறார் அவர்.

janathaa

ஆனால், அதே சூழலில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் அரசியலில்பங்குபெறும் சூழலும் அதிகரிக்க வேண்டும் என்கிறார் செல்வி.

பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாநிலங்களவையில் 2008ஆம் ஆண்டு நிறைவேறியது. ஆனால் இன்னும் மக்களவையில் நிறைவேறவில்லை. இந்திய அளவில் பிஜூ ஜனதா தளம் 2019 மக்களவைத் தேர்தலில் 33 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

அரசியலில் பெண்களின் பங்களிப்பு ஒட்டுமொத்தமாக சமூகத்தை மேன்மையடைய செய்கிறது என்கிறது பொருளாதார வளர்ச்சிக்கான சர்வதேச ஆய்வு நிறுவனம். -BBC_Tamil

TAGS: