3 வீரர்களை இந்தியா சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் புலம்பல்!

பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் அந்நாட்டை சேர்ந்த 3 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

காஷ்மீரின் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் 14-2-2019 அன்று பாகிஸ்தான் ஆதரவுபெற்ற மனிதகுண்டு பயங்கரவாதி நடத்திய கார்குண்டு தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் வலுத்து வருகிறது.

பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் இந்திய நிலைகளின் மீது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் சில வீரர்கள் உயிரிழந்தனர். பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 5 வயது சிறுமி, எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு இன்று தகுந்த பதிலடி கொடுத்த இந்திய படையினர் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 7 பாதுகாப்பு நிலைகளை இன்று தாக்கி அழித்தனர்.

இந்நிலையில், தங்கள் நாட்டு ராவல்கோட் செக்டார் எல்லைப்பகுதியில் உள்ள ரக்சக்ரி என்ற இடத்தில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் இன்று தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பாதுகாப்பு கருதி எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை தற்காலிகமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிரதமர் ராஜா பரூக் ஹடர் அறிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: