தமிழகத்தில் வாக்காளர்களுக்கு எப்படி நடக்கிறது பணப்பட்டுவாடா.. அதிர வைக்கும் உண்மைகள்

சென்னை: தேர்தல் காலம் நெருங்கிவிட்டாலே போதும், வாக்காளர்களான நம்மை, ஒரு திருடனை போல நடத்த ஆரம்பித்துவிடும் சில அரசியல் கட்சிகள். ஆம்.. திருட்டுக்குத்தான் நேரம், காலம் பார்த்து கன்னம் வைக்க வேண்டும். பொதுமக்களும் அப்படித்தான் பம்மி, பம்பி, இந்த கட்சிகளிடம் பணத்தை பெற வேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் மோசமான கலாச்சாரம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக மிக அதிகம். “பணம் கொடுக்காவிட்டால் ஓட்டு போடமாட்டோம்.. அவனுக்கு கொடுத்துருக்கு, எனக்கு தரல..” இப்படியெல்லாம் அறச்சீற்றம் காட்டும் திருவாளர் பொதுஜனமும் பெருகிவிட்டனர்.

இவர்களையெல்லாம் திருப்திப்படுத்த மார்க்கெட் ரேட்டுக்கு தக்கபடி, பணப்பட்டுவாடாவும் அதிகரித்துவிட்டது.

ரேட் ஏறிப்போச்சு பாஸ்

முன்பெல்லாம் ஒரு ஓட்டுக்கு, 500 ரூபாய் என்று அடிமாட்டு விலை வைத்திருந்தார்கள். இப்போதுதான் பணம் வாங்கும் மக்கள் விபரமாகிவிட்டார்களே. ஓட்டுக்கு சில தொகுதிகளில் 5000 வரை எதிர்பார்க்கிறார்களாம். 5000 ரூபாய் லட்சியம்.. 2000 ரூபாய் நிச்சயம் என்ற மனநிலைதான் பல மக்களுக்கும். இப்படி ஒரேயடியாக டிமாண்ட்டை ஏற்றிவிட்டால், பாவம் அரசியல் கட்சிகள். அவர்களும் என்னதான் செய்வார்கள். “ஏம்ப்பா.. தொகுதிக்கு 5 வருடங்களில் நல்லது செய்வதற்கு கஷ்டப்படுவதைவிட, பணத்தை பத்திரமாக வாக்காளர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்குதான் எங்களுக்கு அல்லு போய்ருது” என்று நம்மிடம் அங்கலாய்த்தார், ‘அ’ பெயரில் தொடங்கும் கட்சியின் ஒரு நிர்வாகி.

செம திறமைதான்

தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு பணப்பட்டுவாடா செய்வதை ஒரு கலையாகவே மாற்றிவிட்டனர், சில அரசியல் கட்சிகள். இந்த வலையின் மையப்புள்ளி, பூத் ஏஜென்ட்டுகள்தான். ஒவ்வொரு கட்சியின் பூத் ஏஜென்ட்டும், தொகுதி மக்களில் பலருக்கு பரிட்சையமானவராக இருப்பார். எனவே அவர் வழியாகத்தான், மக்கள் கைகளுக்கு பணம் சென்று சேருகிறது.

பூத் ஏஜென்ட் பூத் ஏஜென்ட்

கொஞ்சம் பெரிய கையாகத்தான் இருப்பார். தெரிந்தவர்களின் குடோன், தொழிற்சாலை என எங்கேயாவது, அந்த பணம் பத்திரமாக வைக்கப்பட்டு, ஓட்டுப் பதிவு நெருங்கும் நாளுக்குள், பக்காவாக பணம் வினியோகம் செய்யப்படும். இதற்கு இவர்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் இரவுதான். திருட்டு வேலைக்கு அதுதானே ஏற்ற நேரம்.

தொழில் தர்மம் பாஸ்

இதிலும், ஒரு தொழில் தர்மம் இருக்குதாம். அதாங்க, ‘பிசினஸ் எத்திக்ஸ்’. ஒரு கட்சி பிரமுகர் பணம் பட்டுவாடா செய்யும்போது மற்றொரு கட்சியினர் போகமாட்டார்களாம். அவர் கொடுத்து முடித்த பிறகு, அடுத்த க்ரூப் களம் இறங்குமாம்.

வழிமுறைகள்

பணம் பொதுவாக ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சைரனை போட்டுக்கொண்டு பேஷன்ட் படுத்திருப்பது போன்ற செட்அப்புகள் ஹைதர் காலத்து பழசு. ப்ரஸ் என எழுதப்பட்ட ஊடக வாகனம் போன்ற போர்வையிலும் பணம் கொண்டு செல்லப்படுகிறது. பொதுவாக அவசரம் கருதி இவ்விரு வகை வாகனங்களையும் காவல்துறையோ, பறக்கும் படையோ தடுக்காது என்பது இதற்கான திட்டம்.

என்னே வில்லத்தனம்

இப்போது புதுப் புது யுக்திகள் வந்தாச்சு. சிலர் தங்கள் கட்சி சின்னம் போன்று அட்டை பெட்டியை தயார் செய்து பணத்தை உள்ளே வைத்து வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள். சிலர் கார் கதவுகளை ‘ஆல்ட்டர்’ செய்து அதற்குள்ளாக பணத்தை வைத்து சுத்துகிறார்கள். போதைப் பொருளை கடத்த எந்தெந்த வழிகளை பயன்படுத்துவார்களோ, அதையெல்லாம், பணத்தை கடத்திச் செல்லவும் பயன்படுத்துகிறார்கள். வாக்காளர்கள் எங்களுக்கு பணம் வேண்டாம் என்று கூறும்வரை இந்த வில்லத்தனங்களுக்கு விடிவு காலம் இருக்காது என்பது மட்டும் உண்மை.

tamil.oneindia.com

TAGS: