ஜாதி, மதங்களால் அரசியல் கட்சிகள் மக்களை பிளவுபடுத்தி உள்ளது- சீமான்!

ஜாதி, மத அடிப்படையில் அரசியல் கட்சிகளால் மக்கள் பிரிக்கப்படுகின்றனர் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நாம் தமிழர் கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது-

மாட்டுக்கே நீதி வழங்கிய மனுநீதி சோழன் வாழ்ந்த தமிழகத்தில் தற்போது அநீதி நடக்கிறது. சமூகம் சீர்கெட்டு கிடக்கிறது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. நன்னெறி கல்வி இல்லாததுதான் இதுபோன்ற சூழலுக்கு காரணமாக உள்ளது. மாணவர்களுக்கு நீதி, ஒழுக்கம் போன்றவற்றை கற்றுத்தரவேண்டும்.

பெண்களை போற்றவேண்டும். பெண்களுக்கு மதிப்பு அளிக்காத இடம் முன்னேறாது. நாம் தமிழர் கட்சி தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 20 பெண்களை போட்டியிட வைத்துள்ளது.

கல்வி தனியார் மயமாக உள்ளது. மருத்துவம் வியாபாரமாக உள்ளது. அரசு பள்ளியும், அரசு மருத்துவமனையும் இருக்கிறது. ஆனால், தரமில்லை. அரசு பள்ளியில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்கவைப்பதில்லை. ஏனென்றால், அரசு பள்ளியில் தரமில்லாத நிலை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் அரசியல் தலைவர்கள் சிகிச்சை பெறசெல்வதில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மாறும். நாம் தமிழர் கட்சி வாக்காளர்களுக்கு பணம் தருவதில்லை. உயர்ந்த கொள்கைகளை கொண்டுள்ளது.

தமிழகத்தில் நீர் மேலாண்மை இல்லை. அதற்கான திட்டங்களும் இல்லை. மரங்களையும், இயற்கையையும் பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்கள் இல்லை. பேராபத்தை நோக்கி நாடு போய்கொண்டு இருக்கிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பல்லாயிர கணக்கான குளங்கள், நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும். கல்வி, பொருளாதாரம், மருத்துவத்துறைகளில் மாற்றங்கள் செய்யப்படும். மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிகளில் மக்கள் துயரங்களை மட்டுமே அனுபவித்து வந்தனர். அ.தி.மு.க.-, தி.மு.க. ஆட்சியிலும் அதே நிலைதான்.

மக்களை பட்டினியினால் கொல்வதை விட பயங்கரவாதம் பெரியதல்ல. ஜாதி, மத அடிப்படையில் அரசியல் கட்சிகளால் மக்கள் பிரிக்கப்படுகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சி தமிழர் என்ற உணர்வுடன் அனைவரையும் இணைக்கும். எங்களது வேட்பாளர் பொள்ளாச்சி தொகுதியில் வெற்றிபெற்றால் தேங்காய் எண்ணெய் ஆலைகள், நார் தொழிற்சாலைகள், விவசாயம் சார்ந்த தொழில்கள் அரசு சார்பில் அமைக்கப்படும். வேளாண்மை தேசிய தொழில் ஆக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோவை சோமனூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது-

மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரே நாள் இரவில் பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. வரி என அமல்படுத்தியது போன்று மீண்டும் ஏதாவது ஒன்றை செய்து மக்கள் தவிக்கும் நிலை உருவாகும்.

எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் மத்தியில் வந்தால் வேளாண்மையை அரசு பணியாக மாற்றுவோம். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

எந்த நாட்டில் டாஸ்மாக் கடையில் கூட்டம் குறைந்து இளநீர் மற்றும் குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறதோ அது தான் சிறந்த நாடு.

திருச்சியில் தென்னக ரெயில்வேயில் 1705 பேருக்கு நடந்த தேர்வில் 1600 பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

எந்த இடத்திலும் தமிழனுக்கு மதிப்பு இல்லை. தமிழன் எங்கும், எதிலும் புறக்கணிக்கப்படுகிறான். வட மாநிலத்தவர்கள் எந்த வழியில் வந்தார்களோ அவர்களை அந்த வழியிலே விரட்டி அடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

-athirvu.in

TAGS: