தமிழகத்தில் ஜாதி கணக்குகள் தேர்தல்களில் கைகொடுக்கின்றனவா?

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்துகின்றன என்ற விமர்சனம் இருக்கிறது. ஆனால், உண்மையில் ஜாதியைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது பலனளிக்கிறதா? தமிழக தேர்தல் களத்தில் ஜாதி ஒரு முக்கியமான அம்சமா?

இந்தியாவின் பல மாநிலங்களில் வேட்பாளர் தேர்வின்போது ஜாதி மிக முக்கியமான ஒரு அம்சமாகச் செயல்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதியினர் அதிகமாக வசிக்கிறார்களோ அந்த ஜாதியைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றன என்ற விமர்சனம் முன்வைக்கப்படுவதுண்டு.

குறிப்பாக, ஜாதியை மறுக்கும் திராவிடக் கட்சிகள் எப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஜாதியைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகின்றன என்ற கேள்வி எழுப்பப்படும்.

“தமிழ்நாட்டில் ஜாதிரீதியான அடையாளங்கள் கூர்மையடைவது கடந்த 20 ஆண்டுகளாகவே, ஏன் 90களில் இருந்தே நடந்துவருகிறது. ஜாதி ரீதியான அமைப்புகள், ஜாதி ரீதியான வரலாறுகளை எழுதுவது ஆகியவை கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன” என்கிறார் தலித் ஆய்வாளரான ஸ்டாலின் ராஜாங்கம்.

1980களின் இறுதியில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உருவான பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் உள்ள பல ஜாதியினருக்கும் ஒரு உதாரணமாக அமைந்தது என்கிறார் ஸ்டாலின்.

பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடிய வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக மாறிய பிறகு அக்கட்சிக்கு ஏற்பட்ட வளர்ச்சியும் அக்கட்சி பல தரப்பாலும் ஏற்கப்பட்டதும் தமிழ்நாட்டில் உள்ள பல பிற்படுத்தப்பட்ட ஜாதி தலைவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது. 1990களின் பிற்பகுதியில் இந்த ஜாதிகள் அனைத்தும் தங்களுக்கென புதிய கட்சிகளை உருவாக்கினர். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஏதும் இந்தக் கட்சிகளுக்குக் கிடைக்கவில்லை.

ஜாதி கணக்குகள் தேர்தல்களில் கைகொடுக்கின்றனவா?

தமிழ்நாட்டில் ஜாதி சார்ந்து மட்டும் அரசியல் செய்வது இயலாத காரியம் என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி. செந்தில்நாதன். “தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தவர்கள் ஜாதி அடையாளங்களுக்கு வெளியில் இருந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதனால்தான் சிறுபான்மை ஜாதியினராக இருந்தாலும்கூட அவர்களால் எல்லாத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவர்களாக இருக்க முடிந்தது” என்கிறார் அவர்.

ஒரு கட்சி ஜாதி அடையாளத்திற்குள் இயங்க ஆரம்பித்துவிட்டால், அக்கட்சி ஒரு அளவுக்கு மேல் வளர்வதோ, அக்கட்சியிலிருந்து முதலமைச்சர்கள் உருவாவதோ இயலாத காரியம் என்கிறார் அவர். பெரும்பான்மை ஜாதியிலிருந்து ஒருவர் தன் ஜாதி பெருமையைப் பேசி, முதல்வராக முயற்சித்தால், பிற பெரும்பான்மை ஜாதிகள் அந்த முயற்சியைத் தடுக்கும் என்கிறார் அவர்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய சில ஆண்டுகள் வரை எல்லா ஜாதியினருக்குமான தலைவர்கள் இருந்த நிலையில், 80களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஜாதியினரும் தனக்கென ஒரு அடையாளத்தைத் தேடும் முயற்சிகள் துவங்கின என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

“ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்போது, அந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாதியைச் சேர்ந்த வேட்பாளரைத் தேர்வுசெய்தால், அந்த ஜாதியினரின் வாக்குகளை ஓரளவுக்குப் பெறலாம் என்ற எண்ணம் கட்சிகளிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மூன்று ஜாதிகளில் வன்னியர்களுக்காக உருவான பாட்டாளி மக்கள் கட்சியைப் போல மற்ற ஜாதிகளுக்கான கட்சிகள் வெற்றிபெறவில்லை. “காரணம், ஒரு கட்சி தன்னை ஜாதி ரீதியாக அடையாளப்படுத்திக்கொண்டால் அந்தக் கட்சிக்கு வாக்களிக்க பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் வெகுவாகத் தயங்குவார்கள். அந்தக் கட்சியால் ஒருபோதும் அந்த ஜாதி அடையாளத்திலிருந்து வெளியில் வரவே முடியாது. பாட்டாளி மக்கள் கட்சி எவ்வளவோ முன்றும் அது நடக்கவில்லை” என்று சுட்டிக்காட்டுகிறார் ஆழி செந்தில்நாதன்.

ஆனால், அதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். வன்னியர் சங்கம் தனியாக இட ஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்தியபோது, உண்மையிலேயே அவர்களது கோரிக்கையில் நியாயம் இருந்தது. அதனால், அந்த அமைப்பாலும் பிறகு கட்சியாக மாறிய பிறகும் வளர முடிந்தது. ஆனால், தென்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர், தமிழகத்தின் மேற்குப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர்களால் அந்த அளவுக்கு வர முடியவில்லை.

காரணம், முக்குலத்தோரைப் பொறுத்தவரை அவர்கள் அ.தி.மு.கவையே தங்கள் கட்சியாகப் பார்த்தனர். கவுண்டர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பல விதங்களிலும் மேம்பட்ட நிலையில் இருந்ததால், எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைத்து அவர்களால் ஒருங்கிணைய முடியவில்லை” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

ஆனால், இந்த ஜாதி ரீதியாக வாக்குகளைத் திரட்டுவதில் பல அபாயங்களும் இருக்கின்றன. ஜாதி வாக்குகளைப் பெற ஒரு கட்சி, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை ஜாதியை ஒட்டுமொத்தமாகத் திரட்டும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தபடிதான் இருக்கின்றன. 2014ஆம் ஆண்டில் தர்மபுரி நாயக்கன்கொட்டாயில் நடந்த கலவரம், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்ட உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஸ்டாலின்

ஆனால், தேர்தல் களத்தில் மிகப் பெரிய அலை வீசும்போது ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதெல்லாம் கணக்கில்கொள்ளப்படுவதில்லை. அந்தத் தருணங்களில் அந்த அலை யாருக்கு சாதகமாக வீசுகிறதோ அந்தக் கட்சியே வெற்றி பெறுகிறது.

2001ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, இம்மாதிரி உருவாக்கப்பட்ட நான்கு புதிய ஜாதிக் கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தது.

முன்னாள் அமைச்சரான எஸ். கண்ணப்பனால் (இப்போது ராஜ கண்ணப்பன்) யாதவர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசம் கட்சி, முதலியார்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, ஏ.எம். ராஜாவின் கொங்கு நாடு மக்கள் கட்சி, கு.ப. கிருஷ்ணனின் தமிழர் பூமி, குழ. செல்லய்யாவின் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றன.

ஆனால், இந்தக் கூட்டணிக்கு பெரும் தோல்வியே கிடைத்தது. தி.மு.க., திருநாவுக்கரசர் தலைமையிலான எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகளைத் தவிர இந்தக் கூட்டணியில் வேறு எந்தக் கட்சிக்கும் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் இடங்கள் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இந்தக் ஜாதிக் கட்சிகள் எல்லாமே, தங்கள் ஜாதியினர் எங்கு தங்கள் ஜாதியினர் அதிகம் உள்ளனரோ அங்குதான் போட்டியிட்டனர்.

2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த ஜாதிக் கட்சிகள் எதுவுமே களத்தில் இல்லை.

ஆனால், 2011ஆம் ஆண்டில் மீண்டும் சில ஜாதிக் கட்சிகள் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகளில் இடம்பெற்றன. அ.தி.மு.க. கூட்டணியில், நாடார்களின் வாக்குகளைக் குறிவைத்து சமத்துவ மக்கள் கட்சி, முக்குலத்தோர் வாக்குகளைக் குறிவைத்து மூவேந்தர் முன்னணிக் கழகம், கவுண்டர்களின் வாக்குகளைக் குறிவைத்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை இடம்பெற்றிருந்தன.

தி.மு.க. கூட்டணியில் அதற்கு இணையாக பெஸ்ட் ராமசாமியின் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், என்.ஆர். தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்த இரு கூட்டணிகளிலும் இருந்த ஜாதிக் கட்சிகளில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 இடங்களை அளித்தது தி.மு.க. 2009ல் தனித்துப் போட்டியிட்ட இந்தக் கட்சி 12 நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட்டு சுமார் 5 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது அ.தி.மு.க. தே.மு.தி.கவுடன் அமைத்த கூட்டணியே வெற்றிக்கு வழிவகுத்தது என்பது புரிந்தது. இரு கூட்டணிகளிலும் இடம்பெற்றிருந்த எந்த ஒரு ஜாதிக் கட்சியும் ஒரு இடத்தையும் பெறவில்லை.

2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை போட்டியிட்டன. எந்தக் கட்சியும் வெற்றிபெறவில்லை.

2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த ஜாதிக் கட்சிகள் வெவ்வேறு கூட்டணிகளில் இணைந்து போட்டியிட்டாலும், அவை தாங்கள் சார்ந்திருக்கும் ஜாதியின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகத் திரட்டித்தரவில்லை.

இந்தத் தேர்தலிலும் பல கட்சிகள் அந்தந்தத் தொகுதியில் உள்ள பெரும்பான்மை ஜாதிகளைக் குறிவைத்து வேட்பாளர்களை களமிறக்கியிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் இந்தக் கணக்குகளுக்கு அர்த்தம் இருக்கிறதா என்பதைக் காட்டக்கூடும். -BBC_Tamil

TAGS: