நல்லெண்ணத்தின் அடிப்படையில் 360 இந்திய கைதிகளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்ததில் முதல்கட்டமாக இன்று 100 பேர் விடுதலையாகினர்.
அரபிக்கடலுக்குள் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, அவர்கள் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இரு நாட்டு தூதரகங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 360 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளனர் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 8-ம் தேதி 100 கைதிகளும், 15-ம் தேதி 100 கைதிகளும், 22-ம் தேதி 100 கைதிகளும், 29-ம் தேதி 60 கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார். இவர்களில் 355 மீனவர்கள் மீதி 5 பேர் தவறுதலாக இந்திய எல்லையை கடந்து சென்று பிடிப்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், முதல்கட்டமாக கராச்சி சிறையில் இருந்து இன்று 100 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கராச்சியில் இருந்து அல்லாமா இக்பால் ரெயில் மூலம் லாகூர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லைப்பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
இப்படி விடுதலையாகும் கைதிகள் இந்தியா சென்று சேர்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான உணவு, உடை ஆகிய உதவிகளை பாகிஸ்தானில் உள்ள ஈதி என்ற தொண்டு நிறுவனம் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-athirvu.in

























