பாகிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கியதே காங்கிரஸ் தான்!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானதற்கு காங்கிரஸ் தான் பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

முதன்முறையாக வாக்களிக்கப்போகும் வாக்காளர்களே, பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தியவர்களுக்காக உங்கள் ஓட்டினை பதிவு செய்யுங்கள். சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் எனும் நாடே உருவாகியிருக்காது. நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவதே எனது குறிக்கோளாகும்.

ஜம்மு காஷ்மீரினை பிரித்து, அதற்கென தனி பிரதமரை உருவாக்கும் எண்ணத்துடனே தேசியவாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, பாகிஸ்தானின் குரலை பிரதிபலிப்பதாக உள்ளது. ஆனால், நேற்று பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை, நாட்டின் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இத்தனை சாதனைகள் நிகழ்த்த காரணம் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையே ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

-athirvu.in

TAGS: