எம்என்சி வேலையை விடுத்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொறியாளர்!

நொய்டாவில் எம்என்சி நிறுவனத்தில் பணிப்புரிந்த பொறியாளர், வேலையை விடுத்து, தொடரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

நொய்டாவைச் சேர்ந்தவர் ராம்வீர் தன்வர்(26). இவர் கடந்த 2014ம் ஆண்டு இயந்திர பொறியியல் இளங்கலை பட்டம் மற்றும் 2016ம் ஆண்டு இயந்திர பொறியியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் எம்என்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்தியாவில் தொடர்ந்து வரும் பிரச்சனைகளில் தண்ணீர் பற்றாக்குறை மிகவும் மோசமானது என்பதை உணர்ந்து, தான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து விலகி, முழு நேரமாக கிராமப்பகுதிகளில் தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். இது குறித்து ராம்வீர் கூறியதாவது:-

பெரிய நகரங்களில் மக்கள் ரூ.20 கொடுத்து 1 லிட்டர் தண்ணீரை பாட்டிலில் வாங்குகின்றனர். ஆனால் கிராமப்பகுதிகளில் இலவசமாக கிடைக்கும் பல நூறு லிட்டர் தண்ணீரை வீணாக்குகின்றனர். வீணாக்கும் தண்ணீரை நான் கணக்கிட்டுப்பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். இது மோசமான விளைவுகளை உருவாக்கும் என அறிந்தேன். இதையடுத்து கிராமப்பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் தனிதனியே சென்று விழிப்புணர்வு செய்ய முடிவு செய்தேன்.

அனுபம் மிஷ்ராவின் புத்தகத்தை படித்தபோது, அதில் செயற்கை குளங்கள் உருவாக்குவது குறித்து தெளிவாக கூறப்பட்டிருந்தது. அந்த திட்டம் என்னை மிகவும் ஈர்த்தது. குளங்கள், தண்ணீர் பிரச்சனைக்கு எத்தனை அவசியம் என்றும், முன்னோர்கள் எதற்காக குளங்களை ஏற்படுத்தினார்கள் என்றும் அதன் பின்னர் தான் புரிந்தது. நிலங்களில் வீணாக தண்ணீரை இறைப்பதை விட இது மிகச் சிறந்த தீர்வாகும்.

எனவே, குளங்களை தூய்மைப்படுத்தவும், செயற்கையாக குளங்களை உருவாக்கவும் ஒரு குழுவினை அமைத்தேன். இப்போது இதில் உள்ள நபர்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

-athirvu.in

TAGS: