பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தா மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தள்ளபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றம் இவ்விடயத்தில் தலையிட முடியாதெனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதாக அப்பகுதியுள்ள மக்கள் கடந்த ஆண்டு மே மாதம் போராட்டம் நடத்தினர்.
இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. ஆனால் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில் குறித்த உத்தரவை கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி உச்சநீதிமன்றம் இரத்து செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் அனுமதி கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமையால் ஆலையில் பராமரிப்பு பணி செய்ய அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் மனுவொன்றை தாக்கல் செய்தது.
ஆனால் அந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்தது.
இதன்போது குறித்த வழக்கின் மனுவை இன்று விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-eelamnews.co.uk