சிலை கடத்தல்.. பொன். மாணிக்கவேல் விசாரணைக்கு தடையில்லை.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் விசாரணைக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டார். சென்னை ஹைகோர்ட்டின் இந்த உத்தரவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இருந்தே தமிழக அரசுக்கும் பொன். மாணிக்க வேலுக்கும் இடையில் நிறைய பிரச்சனை நிலவி வந்தது.

சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி 13 காவல் அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்தனர். பொன்.மாணிக்கவேல் பலர் மீது பொய் வழக்கு போடுகிறார் என்று இந்து அறநிலையத்துறை சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

புகார்கள் என்ன

இப்படி வரிசையாக புகார்களை அடுத்து சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.

சென்னை ஹைகோர்ட்

ஆனால் தமிழக அரசின் இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்ட உத்தரவு செல்லும் அரசு அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் கூறியது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் சென்றது.

என்ன தீர்ப்பு

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதில், பொன். மாணிக்கவேல் விசாரணைக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிலை கடத்தல் வழக்கை பொன். மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம், என்றுள்ளது. மேலும் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது.

விசாரணை மட்டுமே

சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம். ஆனால் அவர் விசாரணை மட்டுமே செய்ய முடியும். யாரையும் இந்த வழக்கில் அவர் கஸ்டடியில் எடுக்க முடியாது. அதேபோல் இந்த வழக்கில் யாரையும் அவர் கைது செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: