ஓட்டுக்கு பணம் வாங்குவோர் மீது வழக்கு தமிழக தேர்தல் அதிகாரி சாஹு உறுதி!

சென்னை: தமிழகத்தில் பண பட்டுவாடாவை தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மட்டுமின்றி பணம் வாங்கும் வாக்காளர் மீதும் வழக்கு பதிவு செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஓட்டுக்கு பணம் வாங்குவோர் மீது வழக்கு பதிவு செய்யும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹு உத்தரவிட்டுள்ளார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று அளித்த பேட்டி: வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். நேற்று முன்தினம் மட்டும் வாகன சோதனையில் 1.18 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக விருதுநகரில் 59 லட்சம் ரூபாய்; கோவையில் 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 182 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 991 கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 284.67 கோடி ரூபாய். இது தவிர 34.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள்; 37.34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 7.81 கோடி ரூபாய். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் ஓட்டு போடுவதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வாங்கும் வாக்காளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யும்படி அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் மாதிரி ஓட்டுச்சாவடி ஒன்று அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது; இதில் அனைத்து வசதிகளும் இருக்கும். வாக்காளர்கள் அமர இருக்கை வசதி வெயிலுக்கு சாமியானா பந்தல் அமைக்கப்படும். ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் பெண்களே நிர்வகிக்கக்கூடிய ஒரு ஓட்டுச்சாவடியும் அமைக்கப்படும். வசதி இருந்தால் கூடுதலாக மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும். 7,225 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஓட்டுச்சாவடியில் ‘வெப் கேமரா’க்கள் பொருத்தப்படும், என்றார்.

-dinamalar.com

TAGS: