சிறுவயது முதல் கொத்தடிமையாக இருந்த 85 வயது முதியவர்.. முதல்முறையாக வாக்களிப்பதால் நெகிழ்ச்சி

திருவண்ணாமலை: சிறுவயது முதல் கொத்தடிமையாக இருந்த 85 வயது முதியவர் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (85). இவர் சிறு வயது முதலே கொத்தடிமையாக இருந்து வருகிறார்.

இதனால் இவர் பணியாற்றும் இடத்தை விட்டு வெளியே வந்ததேயில்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் வரும் 18-ஆம் தேதி முதல் முறையாக வாக்களிக்கவுள்ளார். இவருக்கு மருதாடு அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்கிறார்.

இவர் முதல்முறையாக வாக்களிப்பதை மாவட்ட ஆட்சியர் பார்வையிடவுள்ளார். கொத்தடிமைகள் எனப்படுவது குடும்பத்தில் ஏழ்மை நிலை காரணமாக அந்த ஊர் பணக்காரரிடம் பெற்ற கடனை அடைக்க முடியாமல் சந்ததி சந்ததியாக அவர்களுக்கு பணியாற்றி கடனை கழிப்பது ஆகும். இது சட்டவிரோதம்.

tamil.oneindia.com

TAGS: