‘சாகர் மாலா’ திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இனயம் என்ற மீனவ கிராமம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், இனயம் உள்பட 7-8 மீனவ கிராமங்களை காலி செய்யவேண்டிய சூழ்நிலை வரும், மீனவர்கள் தங்கள் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடும் என்று அஞ்சி எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, சரக்குப் பெட்டகம் அமைக்கும் திட்டம், குமரிக்கு மாற்றப்பட்டது.
அங்கு சரக்குப் பெட்டக மாற்று முனைய ஆதரவு இயக்கம், எதிர்ப்பு இயக்கம் என இரண்டு அணிகள் எதிரும் புதிருமாகப் போராட்டங்களை நடத்திவருகின்றன.
இந்நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் இந்த சாகர் மாலா திட்டம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
சாகர் மாலா திட்டம் என்றால் என்ன?
“துறைமுகம் கொணரும் செழிப்பு” எனும் முழக்கத்தோடு ‘சாகர் மாலா’ என்ற திட்டம் ஒன்றை இந்திய மத்திய அரசு நிறைவேற்ற முயல்கிறது.
உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்த இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று அரசு கூறுகிறது. நாட்டில் மொத்தமுள்ள 7,000 கிமீ கடல் எல்லையிலுள்ள 200 துறைமுகங்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டத்தின் மூலம் துறைமுகங்களை மேம்படுத்துதல், ரயில், சாலை, உள்நாட்டு நதிநீர் போக்குவரத்து போன்றவற்றை மேம்படுத்துவது மூலம் சரக்குகள் கையாள்வது எளிதாக்குவதற்கு பணிகள் நடைபெறுகின்றன.
என்ன சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்?
சாகர் மாலா திட்டம் பற்றி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தற்போதைய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
“சிறிய துறைமுகங்கள், கடற்கரை சார்ந்த பகுதிகளின் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்டது சாகர் மாலா திட்டம்.
மீன்பிடி துறைமுகங்களை கட்டும்போது எந்த எதிர்ப்பும் வருவதில்லை. ஆனால் பிற திட்டங்கள் கொண்டு வரும்போது பெரிய ஆபத்தை விளைவிக்கும், மக்களை அழித்துவிடும் என பொய்யான பிரசாரம் செய்யப்படுகிறது.
கடற்கரை ஓரங்களில் வாழும் மக்கள் மீன் பிடித்து கொண்டுதான் இருக்க வேண்டும், மற்ற மக்களோடு ஒருங்கிணைந்து வாழ்ந்து, சேர்ந்து முன்னேறி விடக்கூடாது என தீய நோக்கத்துடன் பலர் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் சாகர் மாலா திட்டத்தை மீனவ மக்கள் பயன்படுத்தினால் நிச்சயம் வளம் பெற முடியும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும். இனயம் துறைமுகத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கன்னியாகுமரியில் இது தேவையா என்று கேட்டபோது, 60 வருடங்களாக இனையத்தில் துறைமுகம் கொண்டு வரவேண்டும் என மாவட்ட மக்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்.
60 ஆண்டுகளாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக பேட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் துறைமுகம் கொண்டு வருவதாக வாக்குறுதி கொடுத்தனர். இப்போது எதிர்ப்பை தெரிவிக்கும் எதிர்ப்பாளர்கள் அப்போது ஏன் ஏதிர்ப்பு தெரிவிக்கவில்லை? என்று ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் துறைமுகம் கொண்டு வர மாட்டேன் என உறுதி மொழி அளித்தால், அவரை விட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு துரோகம் செய்பவர் யாரும் கிடையாது. துறைமுகம் யார் வேண்டாம் என்கிறார்களோ அவர்கள் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு செய்ய கூடிய மிக பெரிய துரோகம் அது என கருதுகிறேன் என்று பொன். ராதாகிருஷ்ணன் பதில் கூறினார்.
காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரின் நிலைப்பாடு
“துறைமுகம் வேண்டாம் என்று கூறவில்லை, மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தி அதனை வளபடுத்துவதோடு தற்போதுள்ள மீன்பிடி துறைமுகங்களை விரிவாக்கம் செய்யலாம்” என்று தெரிவிக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார்.
- குமரியில் 1,000 வள்ளங்களுடன் கடல் முற்றுகை: சரக்குப் பெட்டக முனைய எதிர்ப்பு
- எண்ணூர் நிலமீட்பு திட்டம்- சுற்றுச்சூழல் கெடுவதாகப் புகார்
ஆனால், பெரிய துறைமுகம் அமைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்கு பெட்டகங்களை வைக்க ஏராளமான ஏக்கர் நிலத்தை கையகபடுத்துவதில் கன்னியாகுமரி பகுதிக்கு என்ன லாபம் என வசந்த குமார் கேள்வி எழுப்பினார்.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் (பொன். ராதாகிருஷ்ணன்) சரக்கு இறக்குமதி ஏற்றுமதி துறைமுகத்தால் வேலை கிடைக்கும் என்கிறார். இல்லாத ஒன்றை சொல்லி நாடாளுமன்ற தேர்தலில் அவர் (பொன்.ராதாகிருஷ்ணன்) வாக்கு பெற வேன்டுமென இவ்வாறு சொல்லி வருகிறார் என்று வசந்த குமார் குற்றஞ்சாட்டினார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க கன்னியாகுமரி பகுதியிலுள்ள இயற்கை வளங்களை அழிக்க கூடாது. இங்குள்ள மலைகளை உடைத்து மோடியின் நண்பரான அதானி நிர்வாகம் செய்துவரும் விழிஞம் துறைமுகத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். அதில் 15 சதவீதம் உடைத்து எடுத்து சென்றுள்ளனர். இதனால் இப்பகுதிகளில் உள்ள இயறகை வளம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வசந்த குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கன்னியாகுமரி துறைமுக ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளர் வேல் பாண்டியன் பிபிசி தமிழிடம் தமது நிலைப்பாடு குறித்துக் கூறும்போது, “இந்தியாவின் தென் பகுதியில் மிகப் பெரிய துறைமுகம் இல்லாததால், 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. பெரிய துறைமுகம் அமைத்தால் 1500 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
இரண்டாவதாக துறைமுகம் வருவதால் கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி அடையும். தொழிற்சாலை அமைக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் இடம் இல்லை. பக்கத்து மாவட்டங்களில் தொழிற்சாலைகள் வருவதற்கு சரக்கு போக்குவரத்துக்கு வசதி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். போக்குவரத்தை மேம்படுத்த ஒரு துறைமுகம் வந்தால் நிச்சயமாக ஓர் இடம் வளர்ச்சியடையும்.
இனயம் பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதில் கடற்கரையில் சில வீடுகளும், உள்நாட்டு பகுதியில் சிலரின் வீடுகள் போகும் என்பதால் பேச்சுவார்த்தை நடத்திதான் குமரியில் அமைப்பது என்று முடிவாகியதாக தெரிவித்தார் வேல் பாண்டியன்.
“எனவே கன்னியாகுமரிக்கு மாற்றியதில், 100 மீட்டர் அரசாங்க நிலம் மட்டுமே போகும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அரசு திட்டப்படி, துறைமுகத்திற்கும், நான்கு வழிச்சாலைக்கு இருக்கும் இடைவெளி மூன்றரை கிலோமீட்டர்தான். நான்கு வழிச்சாலைக்கும், ரயில் பாதைக்கும் சென்றடைவதில் 11 நபர்களின் நிலத்திற்குதான் பாதிப்பு. இந்த 11 பேரும் சம்மதம் தெரிவித்து நிலத்தையும் அளித்து விட்டார்கள்” என்கிறார் வேல் பாண்டியன்.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களின் தொழில் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தபோது. எல்லா வசதிகளும் செய்து தரலாம் என்று சொன்னாலும், யாரும் பேசுவதற்கு தயாராக இல்லை. இங்கு துறைமுகம் வரக்கூடாது. கடல் எங்களுக்கு சொந்தம் என்று எப்போதும் கூறிவருகிறார்கள் என்கிறார் வேல் பாண்டியன்.
80 முதல் 90 சதவீத மக்கள் கன்னியாகுமரியில் துறைமுகம் வருவதை விரும்புகிறார்கள். இந்த எதிர்ப்பு வெளிநாட்டு சக்திகளால் காட்டப்படுவதாக இருக்கலாம் என்று தெரிவித்த வேல் பாண்டியன், இந்த பிரச்சனையை மத ரீதியாக ஒருங்கிணைக்கிறார்கள். கடல் எங்கள் பூமி. இங்கே யாரும் வரக்கூடாது என்று மீனர்வர்கள் கூறுவதாக கூறினார்.
இப்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தில் நிலம் அதிகம் எடுப்பதற்கான தேவையில்லை. தூத்துக்குடியில் பல சமூகத்தவர் மீன்பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று வேல் பாண்டியன் கருத்து தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்து முடித்தவுடனே கன்னியாகுமரியில் துறைமுக திட்டத்தை செயல்படுத்த போவதில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் சொன்னார். அவருக்கு எதிர்ப்பு உள்ளது. அதற்கான விளைவை தேர்தல் முடிவில் காண்பார் என்று தெரிவித்த வேல் பாண்டியன், சாகர் மாலா திட்டம் இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு சாதமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்று கேட்டபோது, இந்த கேள்விக்கு எந்த கருத்தும் இல்லை என்று கூறிவிட்டார்.
தூத்துக்குடி மற்றும் விழிஞம் துறைமுகங்களை விரிவாக்குகிற வாய்ப்புகள் இருக்கின்றபோது, இந்த சின்ன மாவட்டத்தின் மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக, மக்களை அப்புறப்படுத்தி, கடல் தொழிலை ஒட்டு மொத்தமாக இல்லாமல் ஆக்குவது மக்களுக்கு எதிராக செய்கிற துரோகம் என்று கூறுகிறார் கன்னியாகுமரி பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் எம்.சி. ராஜன்.
அடுக்கப்படும் கேள்விகள்
“28,000 கோடி ரூபாய்க்கு அமைக்கபபட்ட ஒரு துறைமுகத்தை எங்காவது காட்ட முடியுமா? மக்கள் வசிக்கிற பகுதியில் எங்காவது ஒரு துறைமுகத்தை அமைப்பார்களா? என்று கேள்வி எழுப்புகிறார் ராஜன்.
துறைமுகத்தில் இருந்து ஆறுவழிச்சாலை வேண்டும். அதாவது, கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம், மற்றும் மதுரைக்கு ஆறுவழிச்சாலை வேண்டும். மேலும், இரண்டு வழி ரயில் பாதைகள் வேண்டும். இதற்கு எல்லாம் எங்கிருந்து நிலத்தை எடுப்பார்கள்?” என்று கேட்கிறார் அவர்.
மிகப் பெரிய துறைமுகம் என்பதால், 1000 கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி வைக்க எவ்வளவு இடம் வேண்டும்? அதற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல் மின்நிலையத்தை அமைக்க எவ்வளவு இடம் வேண்டும்? பெட்டகங்கள் கொண்டு வருகின்ற நிலக்கரியை வைக்க கிடங்கு வேண்டுமா? இதர பொருட்கள் அனைத்தையும் எங்கு வைப்பார்கள்? என்று ராஜன் கேள்விகளை அடுக்கினார்.
துறைமுகம் அமைக்கும் இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவு பகுதி துறைமுகத்திற்கு தேவையான இடம் இருக்க வேண்டுமென்று இந்த திட்டத்திலேயே கூறப்படுகிறது.
இந்த பகுதியில் மக்கள் வாழ முடியாமல் சுமார் 40 ஆயிரம் பேர் வெளியேறுவார்கள். 4000 பேருக்கு வேலை கிடைக்குமா? என்று வினவுகிறார் ராஜன். அவ்வாறு எல்லோருக்கும் வேலை கிடைத்திருந்தால், தூத்துக்குடி துறைமுக பகுதியில் வாழ்ந்தோர் யாரும் வெளியே வேலைக்கு போயிருக்கக்கூடாது அல்லவா? என்கிறார்.
“தூத்துக்குடி துறைமுகத்திற்கு எத்தனை கிலோமீட்டர் தொலைவு நிலம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு இவர்களால் சொல்ல முடியுமா? எண்ணூரில் எவ்வளவு நிலம் தேவைப்பட்டுள்ளது. அங்குள்ள எல்லோருக்கும், அரசு வேலை, துறைமுக வேலை கிடைத்துவிட்டதா? அனைத்திந்திய துறைமுக பொறுப்பு கழகத்தில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வேலை கிடைக்கும். கன்னியாகுமரியில் உள்ள 100 பேருக்கு வேலை கிடைக்கும். 40 ஆயிரம் பேரை வெளியேற்றிவிட்டு கூட்டுவது, பெருக்குவது, லாரி சுத்தம் செய்வது போன்ற வேலைகளுக்காகவா இதெல்லாம்” என்று கேட்கிறார் ராஜன்.
“போதிய இடம் இல்லை என்று சொல்லியே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி வரவில்லை. இடமில்லாத இடத்தில் எப்படி பிற துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகள் வரும். அவற்றை நாங்குநேரி போன்ற கன்னியாகுமரிக்கு வெளியில் உள்ள இடங்களில்தானே தொழிற்சாலைகளை அமைக்க போகிறீர்கள். அப்படியானால், அதற்கு அருகிலுள்ள கூட்டபுளி, கூந்தங்கரை போன்ற இடங்களில் இந்த துறைமுகத்தை வைக்கலாமே. ஏன் அவ்வாறு செய்யவில்லை?
கன்னியாகுமரியில் பெரிய அளவில், பொருட்கள் உற்பத்தியாகவும் இல்லை. ஏற்றுமதியாகவும் இல்லை. பின் ஏன் இங்கு சரக்கு பெட்டக மாற்று முனையம்?” என்று கேட்கிறார் எம். சி. ராஜன்.
இந்த துறைமுகம் வேண்டும் என்பவர்கள் உள்நாட்டை சேர்ந்தவர்கள். எந்தவிதத்திலும் இதனால் பாதிக்கப்படாதவர்கள்.
இத்தகைய நிலைமையில் இதனால் மக்களவைத் தேர்தலில் தாக்கம் இருக்குமா? என்று ராஜனிடம் கேட்டபோது, இந்த துறைமுக பிரச்சனை மக்களவைத் தேர்தலை முடிவு செய்கிற காரணியாக இருக்காது என்று தெரிவித்தார்.
12 லட்சம் பேர் இருக்கின்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் பேர் இருக்கின்ற கடற்கரை மீனவர்களால் தேர்தலை முடிவு செய்கின்ற அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஒன்றரை லட்சம் மீனவர்களிலும் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களிப்போர் இருக்கிறார்கள். எனவே பெரிய தாக்கம் இருக்கும் என்று கூறிவிட முயாது என்று அவர் கூறினார்.
இனயத்தில் இருந்து கன்னியமாகுமரிக்கு மாற்றம் ஏன்?
இனயம் பன்னாட்டு சரக்குப் பெட்டக முனையம் ஏன் கன்னியாகுமரிக்கு இடம்மாற்றம் பெற்றது என்று இனயம் பன்னாட்டு சரக்கு பெட்டக முனைய எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜேசைய்யா ஜோசபிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“சாகர் மாலா திட்டத்திற்கு பெரும் அளவு இடம் வேண்டும். தொழில்துறை பொருளாதார மண்டலம் என்று சொல்லுவார்கள். இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவற்றுக்கு இரண்டு லட்சத்து 64 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்பட்டுள்ளது. சராசரியாக பார்த்தால் ஒரு துறைமுகத்தின் கையில் 22 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இவை கொள்கலன் கையாளாத பெரிய துறைமுகங்கள்.
சாகர் மாலா திட்டம் மூலம் கொள்கலன்களை கையாளும் பெரிய துறைமுகம் வருகிறபோது, ஆறுவழிச்சாலை, இரட்டை ரயில் பாதை, ஏற்றுமதி பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மிக பெரிய தொழில்துறை மண்டலம் போன்றவை வேண்டும். இன்னும் அதிக தேவைகளுக்கு நிலம் வேண்டும். கன்னியாகுமரியை பொறுத்தவரை அதற்கு சாதகமான நிலை இல்லை” என்கிறார் ஜேசைய்யா.
“தரிசு நிலம் உள்ள இடத்தில் இந்த துறைமுகத்தை உருவாக்க வேண்டும். பாலை நிலமே இல்லாத கன்னியாகுமரியில் இந்த திட்டம் அவசியமில்லை.
சாகர் மாலா திட்டத்தை சரியாக கூறாமல், இப்போது உட்கார இடம் கேட்கிறார்கள். தவறுதலான தகவல்களை அளித்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள். துறைமுகத்தை தொடங்கிய பின்னர் எதுவும் செய்ய முடியாது. ஒன்றன் பின் ஒன்றாக பிற ஆக்கிரமிப்பு பணிகள் தொடரும் என்பதுதான் உண்மை” என்று ஜேசைய்யா கூறினார்.
கொள்கலன் கையாளாத 12 பெரிய துறைமுகங்களில் ஒன்று சராசரியாக 22 ஆயிரம் ஏக்கர் வைத்திருக்கும்போது, கண்டெய்னர் முனையமான இதற்கு பெரிய நிலப்பரப்பு வேண்டும். பிறகு, அடுத்த 25 ஆண்டுகளில் இப்போதைய கன்னியாகுமரியை பார்க்க முடியாது. மேற்கு தொடர்ச்சி மலையை பார்க்க முடியாது. இந்த துறைமுகத்தை அமைக்க 20 மில்லியன் டன் எடையுடைய கற்கள் வேண்டும். அந்த கல் எல்லாம் இந்த மலையில் இருந்துதான் எடுக்க வேண்டி வரும்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலில், சாகர் மாலா திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் ஜேசைய்யா ஜோசப்.
கன்னியாகுமரியை பொறுத்தவரை இந்த சர்வதேச பெட்டக மாற்று முனையத்தை எதிர்ப்போர் வெறும் மீனவர்கள் மட்டுமல்ல. மீனவர்கள் மற்றும் மத சிறுபான்மையினர் அனைவரும் இணைந்து எதிர்க்கின்றனர்.
இனயம் பன்னாட்டு பெட்டக மாற்று துறைமுக எதிர்ப்பு முதலில் மீனவர் போராட்டம் மூலம்தான் வெளியே தெரிந்தது. ஆனால், மத சிறுபான்மையினர் அனைவரும் ஒன்றாக இணைந்து, மாவட்டம், மாநில அளவிலான கருத்தொற்றுமையோடு எதிர்த்ததால் மக்கள் போராட்டம் வெற்றிபெற்றது.
துறைமுகங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்
இத்தகைய துறைமுகங்களால் எற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றி கடல் அறிவியல் ஆய்வாளர் வறீதையா கான்ஸ்டான்டைனிடம் கேட்டோம்.
“சாகர் மாலா, பாரத் மாலா திட்டங்கள் வருவதற்கு முன்னாலேயே, ஒட்டுமொத்த கடற்கரைகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுதான் உள்ளன. இவ்வாறு பலவீனப்பட்டு கிடக்கும் இந்த கடற்கரைகள் மீது சாகர் மாலா போன்ற பெரிய திட்டங்கள் மிகப்பெரிய அளவில் தாக்குதல் தொடுக்கப்போகின்றன” என்று வறீதையா கூறினார்.
ஏற்கெனவே, மழை பொழிவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நதிகளில் இருந்து தண்ணீர் சரியாக கடலில் சேரவிடவில்லை. நீர் சுழற்சி சீராக நடைபெறவில்லை என்றால், மழையின் தன்மையும் மாறும். எனவே, கடலுக்கும், காட்டுக்கும், சமவெளி நிலத்திற்கும் நேரடியான தொடர்பு உள்ளதை இது காட்டுவதாக அவர் கூறினார்.
“இதன் காணமாக, கடற்கரையில் இருக்கக்கூடிய பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்வளம் கிடைக்க வேண்டிய காலத்தில், கிடைக்க வேண்டிய அளவு கிடைக்கவில்லை. அனைத்தும் மாற்றம் அடைந்துவிட்டன. மீன் வளம் பாதிக்கப்படும்போது, அதனை சார்ந்து இருக்கிற மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்” என்கிறார் வறீதையா.
மீனவ மக்களை சர்ந்து பிற மக்கள் செய்கின்ற தொழிலும் பாதிப்புக்குள்ளாகிறது. புரத உணவாக மீன் நமது நாட்டுக்கு மிகவும் தேவைப்படுகிறது. ஓராண்டுக்கு ஒருவருக்கு 15 கிலோ மீன் தேவை.
ஆனால் இப்போது, சராசரியாக ஒருவருக்கு ஆறு அல்லது ஏழு கிலோ மீன்தான் கிடைக்கிறது. மனிதனுக்கு பாதி அளவு மீன் உணவு கிடைக்காத நிலையில் நாம் இந்த பெரும் திட்டம் பற்றி பேசுகிறோம்.
கடலின் கரையோரப் பகுதிகளில் பெருந்திட்டங்கள் ஒவ்வொன்றாக கால்பதிக்கின்றன. இத்தகைய திட்டங்கள் வருகிறபோது, அந்தக் கடலையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை வெளியேற்றுவது மிக எளிதாக காரியம் அல்ல.
அந்த பகுதி கடலோடு பரிச்சயமான இவர்கள், அங்கு எப்போது வலை போடலாம், மீன்பிடிக்கலாம், என்ன மீன் கிடைக்கும் என்பதை அனுபவ ரீதியாக தெரிந்து வைத்திருப்பார்கள்.
“தூத்துக்குடியில் துறைமுகம் வந்தபோது, அந்த பகுதியில் இருந்த பல்லுயிர் பெருக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் அனைத்தும் தூத்துக்குடியில் இருக்கின்றன. பக்குவப்படுத்தப்படாத, சுத்தப்படுத்தப்படாத கழிவுகள் அப்படியே கடலுக்குள் வருகின்றன” என்று வறீதையா கூறினார்.
“குப்பைகள் ஏராளம் கடலின் கரையிலேயே கொட்டப்படுகின்றன. கடல் அகழ்வு, தொழிற்சாலைகளால் இந்த பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த கடல் பகுதியில் சங்கு, முத்து ஆகியவை முன்னால் கிடைத்து கொண்டிருக்கிற கடல் தொலைவில் இப்போது கிடைக்கவில்லை. உப்பு படுகைகள் இப்போது இல்லாமல் போய்விட்டன என்று அவர் மேலும் கூறினார்.
மன்னார் வளைகுடாவில் பார்க்கிற இந்த பவளப்பாறைகள், சங்கு, முத்து ஆகியவை கடல் தூய்மையான சூழலில் இருக்கிறபோதுதான் வாழ முடியும். இவற்றை சூழலியல் சுட்டிகள் என்று சொல்வோம். இவை இருக்கிற கடல் சுத்தமான கடல் என்று கூறலாம். இப்போது கடல் நன்றாயில்லை என்பதை இவை இல்லாததை வைத்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் அதிக தொழிற்சாலைகள், ஆக்கிரமிப்புகளை கொண்டு வருவது கடலில் பெரும்பாதிப்புக்களை கொண்டு வரும்.
மீன்பிடி துறைமுகத்தில் பெரிய பாதிப்புக்கள் வராது என்று கூறுவர். அதிலும் “பிரேக் வாட்டர்” என்று கடல் அலையை தடுக்கும் வகையில் நீங்கள் எதனை கட்டியமைத்தாலும், கரையோர நீரோட்ட போக்குகள் மாறிவிடுகின்றன. இதனால் நில விளிம்பின் தன்மை மாறுபடும். கடுமையான கடல் அரிப்பு ஏற்படும் என்கிறார் அவர்.
மணலை அரிப்பதும், மணலை திரும்ப கொண்டு வந்து கொட்டுவதும் வழக்கமாக கடலில் இயல்பாக நடைபெறுகிறது. இதனால், கடலின் தன்மை மாறுவதில்லை. ஆனால், கடலில் ஒன்றை நீங்கள் நிறுவுகிறபோது, அது பெரிய மாற்றங்களை மண்ணரிப்பில் ஏற்படுத்துகிறது. பல்லுயிரியலில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
இனயம் பகுதியில் பளவப்பாறைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இங்கு துறைமுக நிறுவப்பட்டிருந்தால் அந்தப்பகுதி கடலின் தன்மை மாறி போயிருக்கும். அதிக மீனவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து மீன்பிடி தொழில் செய்து வருவதும் பாதிக்கப்பட்டிருக்கும்.
எந்த இடத்தை எடுத்து கொண்டாலும், பன்னாட்டு பெட்டக மாற்று முனையம் வரும்போது, பொருளாதார, சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வறீதையாவின் கருத்து.
1974-78க்கு இடையில் விவேகானந்த கேந்திரத்திற்கு செல்ல சிறியதொரு படகு முனையம் ஒன்றை வைத்தார்கள். இதனை வைத்த பிறகு கன்னியாகுமரி கிழக்கு கடற்கரையில் மிக பெரிய மண்ணரிப்பு ஏற்பட்டது.
இந்த சரக்கு பெட்டக மாற்று துறைமுகத்தால் மிகவும் சிறிய அளவு வேலைவாய்ப்புகள்தான் கிடைக்கும். இது மிகவும் இயந்திரமாக்கப்பட்ட பெட்டக மாற்று முனையமாக இருக்கும் என்கிறார் வறீதையா.
சின்ன விமான நிலையம் அமைக்கவே இடம் இல்லாமல் இருக்கும்போது, ஏன் இந்த பெரிய துறைமுகம் கன்னியாகுமரியில் என்பதுதான் கேள்வி என்கிறார் அவர்.
பல்லுயிர்ப் பெருக்கத்தில் உலகின் ஐந்தாவது முக்கியமான கடற்பகுதி மன்னார் வளைகுடா. இங்கு இந்த துறைமுகம் வந்தால் பல்லுயிர்ப் பெருக்கம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று கூறுகிறார் வறீதையா. -BBC_Tamil