நீதிமன்ற உத்தரவையடுத்து இந்தியாவில் டிக்டாக் செயலியை கூகுள் நிறுவனம் முடக்கியதாக தகவல் வெயியாகியுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்து இந்த உத்தரவு பிறிப்பிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்து அந்த செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது டிக்டாக் நிறுவனம் தரப்பில், டிக்டாக் செயலியால் எந்தவித தவறும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், டிக்டாக் செயலிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் எனவும் கேரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனுவை பரீசிலித்த நீதிபதிகள், டிக்டாக் செயலியை தடைசெய்த உத்தரவில் மாற்றம் இல்லை என குறிப்பிட்டு, இந்த செயலின் நடவடிக்கை தொடர்பில் மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவுபிறப்பித்தது.
இதுதொடர்பாக ஆப்பிள், கூகுள் நிறுவனங்களுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு மத்தியரசு கடிதம் அனுப்பியிருந்தது. இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதாக கூறியுள்ளது. எனினும் ஆப்பிள் நிறுவனம் இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
டிக்டாக் செயலியால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டதையடுத்து, கடந்த 3ஆம் திகதி டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
-eelamnews.co.uk