தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதி, தவிர உள்ள பிற 38 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) 17வது மக்களவைக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
மக்களவைத் தொகுதிகளுடன் காலியாக இருந்த தமிழகத்தின் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மதுரை தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. சித்திரைத் திருவிழா நடைபெற்ற மதுரை மக்களவைத் தொகுயில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் இரவு 9 மணிக்கு கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், இரவு 9 மணி வரை தமிழகத்தில் 70.90% வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 79.75% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 57.43% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இடைத்தேர்தல் நடந்த 18 சட்டமன்றத் தொகுதிகளில் இரவு 9 மணி வரை 71.62% வாக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் அதிகபட்சமாக அரூர் தொகுதியில் 86.96% வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூர் தொகுதியில் 60.87% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது நேர்ந்த முக்கியமான சம்பவங்கள் குறித்து காண்போம்.
மாநிலம் தழுவிய அளவில் பார்க்கும்போது, வாக்குப்பதிவின்போது பெரியளவில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனினும், வேலூர் மாவட்டம் கீழ் விசாரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பாதுகாப்பிற்காக இருந்த சிஆர்பிஎப் வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது அப்பகுதியில் சிறிது பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.
அதேபோன்று ஆரணியில் இருவேறு அரசியல் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், பொன்பரப்பி கிராமத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பல்வேறு வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாகியதாக பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் கூறுகிறார்.
முன்னதாக, மதுரையை பொறுத்தவரை, இன்று (வியாழக்கிழமை) அங்கு சித்திரை விழா நடைபெறுவதை ஒட்டி வாக்குப்பதிவு காலை 7 மணியிலிருந்து இரவு 8 மணிவரை நடத்தப்படுமென்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில வாக்குச்சாவடிகளில் இரவு 7 மணிக்கே கண்காணிப்பு கேமராக்களின் இயக்கம் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றை தவிர்த்து, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாததால், மாநிலத்தில் எந்த பகுதியிலும் மறுவாக்குப்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.
இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாவது கட்ட தேர்தலில், தமிழ் நாடு (38 தொகுதிகள்), புதுச்சேரி (1 தொகுதி), அஸ்ஸாம் (5 தொகுதிகள்), பிகார் (5 தொகுதிகள்), சத்தீஸ்கார் (3 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (2 தொகுதிகள்), கர்நாடகா (14 தொகுதிகள்), மகாராஷ்ரா (10 தொகுதிகள்), மணிப்பூர் (1 தொகுதி), ஒடிஸா (5 தொகுதிகள்), உத்தரப்பிரதேசம் (8 தொகுதிகள்), மேற்கு வங்காளம் (3 தொகுதிகள்) என மொத்தம் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
-BBC_Tamil