நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து.. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி ரஞ்சன் கோகாய் கருத்து

டெல்லி: தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு, உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார். நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் ரஞ்சன் கோகாய். இவர் மீது 35 வயதாகும் பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். உச்சநீதிமன்றத்தின், ஜூனியர் பணியாளாக பணியாற்றி வந்தவர் இவர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின், 22 நீதிபதிகளுக்கு, அந்த பெண் ஒரு பிரமாணப் பத்திரத்தை கடிதமாக அனுப்பியுள்ளார். ரஞ்சன் கோகாய் வீட்டில் 2018ம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதிகளில் அவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தகவல் இடம் பெற்றிருந்தது.

அந்த கடிதம் தொடர்பான செய்தி தற்போது சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பாலியல் புகார் தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்தான் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கூறியிருந்தார். எனவே இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமை நீதிபதி தலைமையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சய் கண்ணா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று கூடியது.

அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நான் 20 வருட காலமாக நீதித் துறையில் பணியாற்றி வருகிறேன். சுய லாபம் இல்லாத எனது சேவையில், தற்போது என் மீது இப்படி ஒரு புகார் கூறப்பட்டுள்ளது. இது நம்பமுடியாததாக இருக்கிறது. நீதிபதி பொறுப்பில் நான் மிகவும் உண்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இது போன்ற பொய்ப் புகார் அடிப்படை ஆதாரமற்றது. இப்படி புகாரை கூறியுள்ளதன் மூலமாக நீதித்துறைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்லது. நீதித்துறையின் ஸ்திரத்தன்மையை உடைப்பதற்கு யாரோ பின்னிலிருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு ரஞ்சன் கோகோய் தெரிவித்தார். அதே நேரம் இந்த சிறப்பு அமர்வில் இருந்து ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனிடையே அமர்வில் இடம் பெற்ற நீதிபதி அருண் மிஸ்ரா, ஊடகங்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: