அமராவதி: தமிழக தேர்தல் பறக்கும் படையினர் கடந்த ஏப்ரல் 17, 2019 அன்று 1,381 கிலோ தங்கத்தை திருவள்ளுரில் வைத்துக் கைப் பற்றினர். அந்த தங்கத்தை குறித்து விசாரித்த போது சென்னையில் உள்ள ஒரு பஞ்சாப் நேஷனல் பேங்க் கிளையில் இருந்து திருப்பதிக்குச் சொந்தமான தங்கத்தை எடுத்துச் செல்வதாக தகவல்கள் வெளியானது.
அந்த 1381 கிலோ தங்கத்தின் சுத்தத் தன்மை பரிசோதிக்கப்பட்டு, மதிப்பீடு செய்தது தேர்தல் ஆணையம். அப்போது இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 400 – 440 கோடி ரூபாய் வரை இருக்கும் எனவும் மதிப்பிட்டது.
அடுத்த சில நாட்களில் திருப்பதி நிர்வாகம் இந்த 1381 கிலோ தங்கமும் தங்களுடையது இல்லை என உறுதியாக அடித்துச் சொன்னது திருப்பதி கோவிலை நிர்வகிக்கும் டிடிடி (TTD – Tirumala Tirupati Devasthanam).
அது தான் இது
ஆனால் இப்போது சில தினங்களுக்கு முன் அதே திருப்பதி தேவஸ்தான அமைப்பு (TTD – Tirumala Tirupati Devasthanam)தங்கத்துக்கான டாக்குமெண்டுகளை முறையாக தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து தன் 1381 கிலோ தங்கத்தை மீட்டுச் சென்றிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு தான் திருப்பதி தேவஸ்தான கோவில் அமைப்பு தங்களின் தங்கக்கட்டிகளை சென்னையில் உள்ள ஒரு பஞ்சாப் நேஷனல் பேங்க் கிளையில் டெபாசிட் செய்திருக்கிறார்களாம். அந்த தங்கம் தான் இந்த 1,381 கிலோ தங்கம் எனக் கணக்கு சொல்லி இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள்
ஏன் முதலிலேயே தங்கத்துக்கான தன் டாக்குமெண்டுகளை ஒழுங்காகக் காட்டவில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இப்படி தேர்தலுக்கு முந்தைய நாள் எப்படி சரியாக தங்கம் தமிழகத்துக்குள் வந்தது எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதோடு இந்த பிரச்னையை விசாரிக்க வேண்டும் எனவும் சொல்லி வந்தார்கள் எதிர்கட்சிக்காரர்கள்.
விதிகள் பின்பற்றவில்லை
திருப்பதி தேவஸ்தான அமைப்பில் முன்னாள் நிர்வாகியாக பணியாற்றிய ஆந்திர பாரதிய ஜனதா கட்சியிலும் இருக்கும் பானு பிரகாஷ் “திருப்பதி கோவில் நிர்வாகத்தின் மீதான மதிப்பையே கேள்விக்குறியாக்கி விட்டது. பஞ்சாப் நேஷனல் பேங்க் முறையாக தங்கத்தை திருப்பதிக்கு கொண்டு வர விதிமுறைகளை பின்பற்றவில்லை. அதோடு பஞ்சாப் நேஷனல் பேங்கில் இருந்து தங்கம் வரும் செய்தி திருப்பதி தேவஸ்தான் நிர்வாகத்துக்கே தெரியவில்லை எனவும் சொல்ல இருக்கிறார்.
விசாரணை
திருப்பதி தேவஸ்தான பிரச்னைகளை முழுமையாக விசாரிக்க ஆந்திர அரசின் முதன்மைச் செயலாளர் சுப்ரமணியம் ஒரு விசாரனைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த விசாரணையை ஆந்திர வருவாய்த் துறைச் சிறப்புச் செயலாளரான மன்மோகன் சிங் மேற்கொள்ள இருக்கிறார். பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு இடையில் நடக்கும் பரிமாற்றங்களில் ஏதாவது குறைபாடு, விதிமீறல்கள், போக்குவரத்துச் சிக்கல்கள் இருந்தால் அவைகளைச் சுட்டிக் காட்டிக், களையச் சொல்லி இருக்கிறார்களாம்.
திருட்டு
கடந்த பிப்ரவரி 2019-ல் தான் திருப்பதி கோவிலில் வெங்கடாசலபதிக்கு சாத்தும் தங்க கிரீடங்கள் மூன்று காணாமல் போனது. அந்த வழக்கும் இன்று வரை விசாரிக்கப்பட்டு வருகிறதே ஒழிய விவரமாக விஷயம் இன்னும் வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.