டெல்லி: அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை, இந்தியா நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கடந்த நவம்பர் மாதமே உலக நாடுகளுக்கு தடை விதித்து விட்டது அமெரிக்கா.
ஆனால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வசதியாக இந்தியா, சீனா, உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருந்தது. 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இனிமேலும் விதிவிலக்கு தர முடியாது என்று அமெரிக்கா கூறிவிட்டது.
மே 1-ம் தேதிக்கு பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது. இது பற்றி பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான மைக் பாம்பியோ, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இனி எந்த நாட்டிற்கும் விதிவிலக்கு அளிக்க இயலாது.
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெயை எந்த ஒரு நாடும் ஏற்க கூடாது என்ற முடிவில் நாங்கள் தெளிவாக உள்ளோம். எங்களது கொள்கையை மற்ற நாடுகள் எவ்வாறு கடைபிடிக்கின்றன என்பதை மிக உன்னிப்பாக கண்காணிப்போம். எந்த ஒரு நாடோ அல்லது நிறுவனமோ ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முனைந்தால் அது தவறு என அர்த்தம் என்றார்.
வெனிசுலா மற்றும் ஈரான் என இரண்டு நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இரண்டு நாடுகளுமே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வலம் அதிகமுள்ள நாடுகள். அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியாவும் பணிய உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
ஈரானில் இருந்து இறக்குமதியை நிறுத்தினால் உருவாகும் பற்றாக்குறையை ஈடு செய்ய சவுதி, குவைத், ஐக்கிய அரபு உள்ளிட்ட மற்ற நாடுகளிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க பேச்சு நடத்தி வருவதாக கூறியுள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், தேர்தலை கருத்தில் கொண்டு விலை உயர்வை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசு, வாக்குப்பதிவு முடிந்ததும் ஒரே நாளில் ரூ.10 வரை பெட்ரோல் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.