ராசிபுரத்தில் குழந்தைகளை விற்று, லட்சக்கணக்கில் சம்பாத்தியம்… 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிக்கினார்

நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தவறான உறவில் பிறந்த குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு, சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். பணத்திற்கு குழந்தைகளை விற்கும் ஓய்வு பெற்ற செவிலியரின் ஆடியோ வெளியானதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் அழகான தோற்றம், கலர் ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. ஆண் குழந்தைகளை 4 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை 3 லட்ச ரூபாய்க்கும் விற்பதாக கூறப்படுகிறது.

ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் செவிலியர் பர்வின் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் இன்று கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, குழந்தை கடத்தல் விவகாரத்தில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என சந்தேகம் தெரிவித்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், 3 குழந்தைகளை ஓமலூர் மற்றும் கொல்லிமலையில் விற்பனை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டனர் என்று கூறினார்.

tamil.oneindia.com

TAGS: