ராசிபுரம்: ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா. இவர் அண்மையில் பேசிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய் என்றும் பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய் என்றும் நிறம், எடைக்கேற்ப விலை கூடும், குறையும் என அவர் பேசிய விதம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
பிறப்பு சான்றிதழ்
அதுமட்டுமல்லாமல் 30 ஆண்டுகளாக கடவுளின் ஆசியுடன் எந்த குறையும் இல்லாமல் இந்த தொழில் நடக்கிறது என அமுதா ஆடியோவில் பேசியுள்ளார். மேலும் ரூ 70 ஆயிரம் கொடுத்தால் போதும் உங்களுக்கே இந்த குழந்தை பிறந்தாற்போல் பிறப்பு சான்றிதழ் வாங்கி தந்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
இதையடுத்து குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
உண்மைதன்மை ஆராயும் பணி
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் கூறுகையில் கொல்லிமலை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10 குழந்தைகளை அமுதாவிடம் விற்றுள்ளேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் ராசிபுரம், கொல்லிமலையில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களின் உண்மை தன்மை ஆராயும் பணி நடைபெறுகிறது.
மேலும் 3 பெண்கள் கைது
இந்த நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக குமாரபாளையம், பவானி, திருச்செங்கோட்டை சேர்ந்த 3 பெண்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை குழந்தை கடத்தல் விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.