தங்கமங்கை கோமதி மாரிமுத்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு.. சென்னை விமான நிலையத்தில் வரவேற்க ஆளில்லை

சென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவை சென்னை விமான நிலையத்தில் வரவேற்க தமிழக அரசு சார்பில் ஒரு அதிகாரி கூட செல்லவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்றார் கோமதி மாரிமுத்து (30).

பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

குக்கிராமம்

இவரது சொந்த ஊர், திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற குக்கிராமம் ஆகும். கோமதியின் வெற்றி, சாதனைகளுக்கு, ஊரோ, பொருளாதார பின்னணியோ தடையில்லை. உத்வேகம் இருந்தால் போதும் என்ற படிப்பினையை இளம் சமூகத்திற்கு கடத்திச் சென்றுள்ளது. இன்றைய இளம் தலைமுறைக்கு, கோமதி ஒரு ஆதர்ஷ நாயகியாக உருமாறிவிட்டார் என்றால் அது மிகையில்லை. நாடு முழுக்க இருந்தும் கோமதிக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஆனால், தாய் மாநிலமான தமிழகத்தில், இவருக்கு உரிய மரியாதை கிடைத்துள்ளதா என்றால், இல்லை என்பதுதான் சோகமான பதிலாக இருக்கும்.

சபாஷ் தமிழா

ஏனெனில், கத்தார் நாட்டில் வசிக்கும் தமிழர்கள், தாங்களே ஓடி வந்து, கோமதியை அழைத்து, பாராட்டு தெரிவித்தனர். ஆனால் கோமதி, நேற்று நாடு திரும்பியபோது, சென்னை விமானநிலையத்தில் அவரை வரவேற்க தமிழக அரசின் சார்பில் அமைச்சர்களோ, ஏன் அதிகாரிகளோ கூட வரவில்லை.

வரவேற்கவில்லை

குறைந்தபட்சம், விளையாட்டுத்துறை ஆணையம் தரப்பிலும் எந்த அதிகாரிகளும் விமானநிலையத்துக்கு வரவில்லை. நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ள கோமதி மாரிமுத்துவை தமிழக அரசு இப்படியா நடத்துவது என்ற ஆதங்கம், பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.

நல்லவர்களும் உண்டு

கோமதி மாரிமுத்துவின் வறுமை பின்னணிதான், அவருக்கான உரிய அங்கீகாரத்தை இந்த சமூகத்தில் பெற்றுத்தரவில்லையோ, ஜாதியும், பணமும் பக்கபலமாக இருந்தால்தான் தமிழ் மண்ணில் திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்குமோ என்ற ஐயங்களை வெகு ஜனங்கள் மத்தியில் எழுப்பியுள்ளது இந்த நிகழ்வு. இதனிடையே, ரோபோ சங்கர் போன்ற, திரையுலக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும், கோமதி மாரிமுத்துவிற்கு பொருளுதவிகளை வாரி வழங்க ஆரம்பித்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: