ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு: ‘வறுமை காரணமாக சொற்ப தொகைக்கு குழந்தைகளை விற்ற மலைவாழ் மக்கள்’

ராசிபுரத்தை சேர்ந்த ஒய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி கொல்லிமலை மலைவாழ் மக்களின் குழந்தைகளை வாங்கி இளம் பெற்றோருக்கு அதிக பணத்திற்கு விற்றுள்ளார் என நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குழந்தை இல்லாத பெற்றோர்களிடம் சுமார் மூன்று லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு, ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், கொல்லிமலை மலைவாழ்மக்களின் குழந்தைகள் என பலதரப்பட்ட குடும்பங்களில் இருந்து குழந்தைகளை வாங்கி அமுதவள்ளி விற்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது என நாமக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

குழந்தை இல்லாத ஒரு பெற்றோரிடம் அமுதவள்ளி பேரம் பேசுவது போன்ற ஒரு ஒலிப்பதிவு கடந்த வாரம் சமூகவலைத்தளத்தில் பரவியது. இந்த ஒலிப்பதிவை அடுத்து, அமுதவள்ளியை கைது செய்த நாமக்கல் மாவட்ட காவல்துறை, அவரோடு ஈடுபட்ட அவரது கணவர் ரவி மற்றும் இடைத்தரகர்களாக வேலைசெய்த ஆறு நபர்களை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

”அமுதவள்ளி கடந்த ஏழு ஆண்டுகளாக பணத்திற்காக குழந்தைகளை விற்றுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். இவரிடம் குழந்தையை வாங்கிய பெற்றோர்கள் அந்த குழந்தைகளை தங்களது குழந்தைகளாக வளர்த்துவருகிறார்கள் என்பதை உறுதிசெய்தோம். கொல்லிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் இனத்தைத்சேர்ந்த ஐந்து ஏழை தாய்மார்களுக்கு நான்காவது அல்லது ஐந்தாவது பெண் குழந்தையாக பிறந்த குழந்தைகளை இவர் வாங்கியுள்ளதை கண்டறிந்தோம்,”என்கிறார் நாமக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு.

சொற்பமான பணத்தை கொடுத்து, மலைவாழ் பெண்களிடம் குழந்தைகளை அமுதவள்ளி வாங்கியுள்ளார் என்றும் வறுமை காரணமாக மலைவாழ் பெண்கள் குழந்தைகளை கொடுத்துள்ளார்கள் என்றும் அருளரசு கூறுகிறார்.

”தமிழகம் மற்றும் பிற மாநிலம் அல்லது வெளிநாடுகளுக்கு குழந்தைகளை அமுதவள்ளி கொடுத்துள்ளாரா என விசாரித்து வருகிறோம். தற்போது குழந்தைகளையும், உண்மையான பெற்றோரையும் அடையாளம் கண்டுவருகிறோம். மேலும் இடைத்தரகர்கள் கைதாவார்கள்,”என அருளரசு தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: