கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவல்… ராமநாதபுரத்தில் கண்காணிப்பு தீவிரம்

ராமநாதபுரம்: இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பாம்பன் ரயில் பாலம், ரயில் நிலையங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவியதாக கர்நாடக காவல்துறை சார்பில், தமிழக காவல்துறைக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலையடுத்து பாம்பன் ரயில், தரைவழி பாலங்களில் நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், தடயவியல் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. பாம்பன் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் சென்று திரும்பும் வாகனங்கள் ராமநாதபுரம் வழியாக செல்ல வேண்டும் என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர். ராமநாதபுரம், ராமேஸ்வரம் ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களையும் கூடுதல் நேரம் நிறுத்தி, மக்கள் பயணிக்கும் அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் சோதனையிட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் போலீசார், ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் தங்குவோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான அரசு மருத்துவமனை, பஸ் நிறுத்தங்கள், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தீவிர சோதனைக்கு பிறகே, பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: