சென்னை: இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் நெருங்கிய கூட்டாளி கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வந்து சென்றுள்ளார் என்று உளவுத்துறை தெரிவித்து உள்ளது.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமான எல்லோரையும் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது.
கடந்த 21ம் தேதி ஞாயிறு அன்று இலங்கையில் வரிசையாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். 450க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
சென்னை வந்தார்
இந்த நிலையில் இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் நெருங்கிய கூட்டாளி கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வந்து சென்றுள்ளார் என்று உளவுத்துறை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை விசாரணை ரிப்போர்ட் ஒன்றை தமிழக போலீசிடம் சமர்ப்பித்து உள்ளது. உடனடியாக இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று உளவுத்துறை கோரியுள்ளது.
எங்கு வந்தார்
அதன்படி ஹசன் என்ற இலங்கையை சேர்ந்த இளைஞர் கடந்த 14ம் தேதி சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. அங்கிருந்து இவர் சென்னை மண்ணடி பகுதிக்கு சென்றுள்ளார். பின் சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு நபர்களை சந்தித்துள்ளார்.
யார் இவர்
ஹாசீம் என்ற தீவிரவாதிக்கு இந்த ஹசன் மிகவும் நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்தான் சரான் ஹாசிம். இவர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர். இவருக்கு நெருக்கமான நபர்களை உளவுத்துறை தேடி வருகிறது.
ஏன் முக்கியம்
இந்த நிலையில் ஹசன் சென்னை வந்தது ஏன் என்று விசாரணை நடந்து வருகிறது. சென்னையில் இவர் யாரை எல்லாம் சந்தித்தார் என்று விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியே வரலாம் என்று கருதப்படுகிறது.