சென்னை: லோக்சபா தேர்தலிலும் போட்டியிடவில்லை, 22 தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. இதோ 4 தொகுதி இடைத் தேர்தலும் வந்து விட்டது. அதிலும் சீமான், கமல் போட்டியிடவில்லை. ஏன் இத்தனை தயக்கம் இவர்களுக்குள்.
தமிழகம் சமீபகாலத்தில் அதீதமாக உற்றுப் பார்த்த இரு தலைவர்கள் யார் என்றால் அது சீமான், கமல் ஆகத்தான் இருக்க முடியும். ஒட்டுமொத்த மாநிலத்தையும் தங்கள் பக்கம் திரும்ப வைத்தவர்கள் இவர்கள். குறிப்பாக இளைஞர்களை, இளம் வாக்காளர்களை, புதிய வாக்காளர்களை. காரணம், ஏதாவது மாற்றம் கிடைக்காதா, மாறுதல் வராதா என்ற ஏக்கம் மக்களை விட்டு இன்னும் போகாமல் இருப்பதால்.
சீமான் இதுவரை பேசிய பேச்சுக்களிலேயே இந்த முறை மேற்கொண்ட பிரச்சார பேச்சுக்கள்தான் மிகப் பெரிய வீச்சைக் கொண்டிருந்தது. சமூக வலைதளங்கள் மூலம் மக்களை வெகுவாக ஆக்கிரமித்திருந்தது. வேறு எந்தத் தலைவருக்கும் கிடைக்காத பெருமை இது. கருணாநிதி போன்ற ஆளுமையான தலைவர்களுக்கு சற்றும் குறையாத வீச்சு கொண்டிருந்தது சீமான் பேச்சு என்பதில் சந்தேகமே தேவையில்லை.
சீமான் பேச்சு
எழுதி வைத்துப் படிக்காமல், தமிழகத்தின் பிரச்சினைகளை அக்குவேறு ஆணி வேராக சொல்வதோடு நிற்காமல் அதற்கான தீர்வுகளையும் முன் வைத்து எளிய தமிழில் உரத்த குரலில் சீமான் பேசியதை மாற்றுக் கட்சியினரும் கூட ரசித்து பார்த்தனர் என்பதில் சந்தேகம் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரே தனது வேலையை விட்டு விட்டு சீமான் பேச்சை அமர்ந்து கேட்டது அதற்கு நல்லதொரு உதாரணம்.
காரம் குறையவில்லை
உண்மையில் சீமான் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அத்தனை கட்சிகளுக்கும் எதிர்க்கட்சியாக தனித்து விடப்பட்டுள்ளார். அத்தனை கட்சிளுக்கும் இவர் எதிரியாக மாறியுள்ளார். ஆனாலும் அஞ்சாமல் சலசலப்பே இல்லாமல் தனது பேச்சுக்களில் காரம் குறையாமல் விடாமல் விரட்டி வருகிறார் என்பதே ஆச்சரியமாக உள்ளது.
ஊடுருவல்
மறு பக்கம் கமல்ஹாசன். புதிய கட்சி ஆரம்பித்த கையோடு அதை மக்களிடம் அழகாக எடுத்துச் சென்ற விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது. படித்தவர்கள் மத்தியில்தான் கமல் எடுபடுவார் என்று பேசப்பட்ட நிலையில் அதைத் துடைத்துப் போடும் வகையில், கிராமங்களிலும் கமல் ஆழ ஊடுருவி இருக்கிறார் என்பது யாரும் எதிர்பாராதது. காரணம், இவர் மேற்கொண்ட கிராம சபை கூட்டங்கள் பிற கட்சியினரையும் அதிர வைத்தது. கிராம சபை கூட்டங்கள் மூலம் தனது மக்கள் நீதி மய்யத்தை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சென்று விட்டார் கமல்ஹாசன்.
ஈர்ப்பு
அவருடன் கூட்டணி வைக்கலாம், இவருடன் கூட்டணி என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்த நிலையில் யாருடனும் சேராமல் அனைத்து தொகுதிகளிலும் ஆட்களை இறக்கினார் கமல். புதிய, வித்தியாசமான, வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக புதிய வாக்காளர்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், படித்தவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. புத்திசாலித்தனமான சில செயல்பாடுகளால் மக்களின் கவனத்தை தன் பக்கமும் ஈர்த்துப் பிடித்திருந்தார் கமல்.
சறுக்கல்கள்
இந்த இடத்தில்தான் கமலும், சீமானும் சின்னதாக ஒரு சறுக்கலை சந்தித்தனர். என்னதான் புத்திசாலித்தனமாக வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என்று போனாலும் கூட இருவரும் போட்டியிடாதது அவர்களது கட்சிகளுக்கு சிறிய சறுக்கல்தான். இருவரும் போட்டியிட்டிருந்தால் போட்டி இன்னும் அனல் பறந்திருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இடைத்தேர்தல்
குறிப்பாக கமல்ஹாசன் ராமநாதபுரத்தில் போட்டியிட்டிருக்கலாம் அல்லது கோவையில் களம் கண்டிருக்கலாம். அதே போல சீமானும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டிருக்கலாம். ஆனால் இருவரும் சொல்லி வைத்தாற் போல லோக்சபா தேர்தலிலும் போட்டியிடவில்லை, சட்டசபை இடைத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. இப்போது இருவரும் 4 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் வேட்பாளர்களை இறக்கியுள்ளனர்.
ஏன் தயக்கம்?
இவர்கள் இருவரும் இந்த தேர்தலிலாவது களம் குதித்திருக்கலாம். நிச்சயம் அது ஒரு மினி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையையும் இவர்கள் பக்கம் திருப்பியிருக்கும். திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளையும் மிரள வைத்திருக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். குறிப்பாக கமல்ஹாசன் சூலூர் அல்லது திருப்பரங்குன்றத்தில் களம் குதித்திருக்கலாம். அதேபோல சீமானும் ஒரு தொகுதியில் இறங்கியிருக்கலாம். ஆனால் இருவரும் தேர்தலில் போட்டியிட ஏன் தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை.
செல்வாக்கு
சீமானாவது ஒருமுறை தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் வைத்துள்ளார். ஆனால் கமல் இதுவரை போட்டியிடவில்லை. அவர் நேரடியாக களத்தில் குதித்து தனது செல்வாக்கையும், தனது கட்சியின் செல்வாக்கையும் பரீட்சித்துப் பார்த்திருக்கலாம். இந்த விஷயத்தில் அவர் விஜயகாந்த் போல அதிரடியான செயல்பாட்டுக்கு மாறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நடுநிலை அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. கமல், சீமான் இருவரும் இணைந்து செயல்படுகிறார்களோ இல்லையோ ஆனால் நிச்சயம் அதிரடி காட்டி இறங்கியாக வேண்டிய நிலையில் உள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை.