சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமான சோழவரம் ஏரி வறண்டதால் புழல் ஏரிக்கு நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஆகிய நான்கு முக்கிய ஏரிகள் பூர்த்தி செய்து வந்தன. தமிழகத்திற்கு நீர் ஆதாரமாக திகழும் வடகிழக்கு பருவமழையே ஆண்டுதோறும் இந்த ஏரிகள் நிரம்ப வழிசெய்யும்.
இந்நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் பொய்த்து போனது. இதனால் கோடை காலம் தொடங்கும் முன்பே பூண்டி, புழல் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் நீரின்றி காயத் தொடங்கியது.
டேங்கர்களில் தண்ணீர்
சென்னையின் பெரும்பாலன இடங்களில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால் மக்கள் பெரும் தண்ணீர் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர். பலரும் டேங்கர்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வறண்ட சோழவரம் ஏரி
இந்நிலையில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி வறண்டுள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.
ராட்சத மோட்டார்கள்
மூன்று ராட்சத மின்மோட்டார்கள் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது சோழவரம் ஏரி வறண்டதால் புழல் ஏரிக்கு தண்ணீர் வெளியேற்றுவதை குடிநீர் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.
ஏமாற்றிய புயல்
தற்போது ஒடிசா மாநிலத்தை அச்சுறுத்தி வரும் ஃபானி புயல் தமிழகத்திற்கு மழையை கொடுத்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஃபானி புயலும் ஏமாற்றியதால் சென்னைக்கு மழை கிடைக்கும் வாய்ப்பு நழுவியது.
தண்ணீருக்கு திண்டாட்டம்
தற்போது சோழவரம் ஏரியும் வறண்டு புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடும் ஆபத்து உருவாகியுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சென்னையில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.